பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர் கால வரலாறு

143


என்ற கொள்கையும் அதனை அவர்கள் முதன்முதலில் காஞ்சியில் வாழ்ந்த காலத்தில் கல்வெட்டுக்களில் பயன்படுத்தினர் என்பதனையும் சீன யாத்திரிகர் (Beal's Si-yu-ki P. 226) துணை கொண்டும் டாக்டர் பர்னல் (Dr. Burnal) துணை கொண்டும் காட்டியுள்ளார். இவற்றால் பல்லவர் வடநாட்டில் முளைத்தெழுந்த ஒரு மரபினர் எனக் கொள்ளுதலே பொருத்தமானதாகும்.

இவ்வாறு வடநாட்டு எல்லையிலிருந்து மெல்ல மெல்லக் காஞ்சியில் வந்து ஆண்ட பல்லவ மன்னர்களைப் பற்றிய ஆய்வினைப் பல அறிஞர்கள் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நன்கு செய்துள்ளனர். அவ்வாராய்ச்சிகளின் வழியே பல நூல்களும் வெளிவந்துள்ளன. அவற்றுள் அவர்கள் பல்லவர்களைப் பிராகிருதப் பல்லவர்கள் எனவும் வடமொழி அல்லது சமஸ்கிருதப் பல்லவர் எனவும் பிற்காலத்தவரைத் தமிழ்ப் பல்லவர் எனவும் பிரித்துள்ளனர் அவரவர் கல்வெட்டுகளில் அமைந்த மொழிகளின் அடிப்படையில் இப்பெயர்கள் அமைந்தன. இந்தப் பரம்பரையினர் தொடர்ந்து தந்தைவழி மகன் என வந்துள்ளனர் எனினும் இடையிடையே சில சிக்கல்கள் எழுந்துள்ளன. அவற்றுள் ஒன்று பிற்காலப் பல்லவருள் இரண்டாம் பரமேசுவரனுக்குப் பிறகு நந்திவர்மப் பல்லவ மன்னன் பட்டத்துக்கு வந்த வரலாறாகும். பரமேசுவரனுக்குப் பரம்பரை அற்ற காரணத்தாலோ அன்றித் தக்கவர் இல்லாத காரணத்தாலோ மக்கள் மாற்றுவழிப் பல்லவர் மரபிலே ஒருவரைத் தேடவேண்டி வந்தது. பல்லவர் வரலாற்றில் இந்த முறை ஒரு சிறந்த விளக்கமாக அமைகின்றது. பரமேசுவரன் தனக்குப் பின் இன்னார் என்று எழுதி வைத்தானா இல்லையா என்று சொல்ல முடியாது. அவனுக்குப்பின் அவனுடைய உரிமை மக்கள் அரசேற்கத் தக்கவர் இல்லையா என்பதும் தெரியவில்லை. ஆனால் பல்லவ மல்லனை மக்கள் விரும்பி ஏற்ற நிலைதான் நோக்கத்தக்கது. மன்னர் ஆட்சி மரபு இருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/145&oldid=1359083" இலிருந்து மீள்விக்கப்பட்டது