பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

தமிழர் வாழ்வு


கொள்கைகளிலும் வேற்று முறைகளிலும் தம்மைப் பறி கொடுத்தவராகவே காண்கின்றனர். அவ்வளவு வேகமாக மாற்று நாகரிகமும் சமயங்களும் தமிழ்நாட்டில் ஊன்றத் தொடங்கிவிட்டன. சிலம்பின் காலத்திலேயே மாடலன் வழியே வைதிக சமயத்தின் வளர்ச்சியை அறிகிறோம். எனவே அந்த அடிப்படையில் பல்லவர் காலத்திய சமய, இலக்கியங்கள் வளர்ந்துள்ளன. அந்த இலக்கியங்கள் தூய தமிழ் நடையை விட்டுப் பிற மொழிகளையும் பின்பற்றின. சமயமும் சாதியும் போரிடத் தொடங்கி அவற்றைக் கடவுள் நெறிக்கு வழி காட்டும் எல்லைக் கற்களெனக் காட்டும் பாடல்களைக் காண்கிறோம். எனவே இந்தப் பிற மொழிப் பல்லவர் ஆட்சியில் சமய அடிப்படையில் வேற்று மொழிகளும் கொள்கைகளும் பரவலாயின, 'ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்', 'ஆரியமும் தீந்தமிழும் ஆயினான் காண்' என்று ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டின் ஒரு மொழிக் கொள்கை மாறி இரு மொழிக் கொள்கை நிலைபெறத் தொடங்கிற்று. தமிழ் மக்கள் தமிழுக்குச்சமமாக மற்றொரு மொழியையும் தங்கள் வாழ்விடைக் கொள்ள வழி வகுத்த காலம் இப் பல்லவர் காலமேயாகும். இந்தக் கொள்கையைத் தமிழர்கள் வெறுக்காது ஏற்றுக் கொண்டதைக் கண்ட வேற்று மொழியாளர் ஒரு படி மேலே சென்றனர். அதனால்தான் நாட்டில் மொழி அடிப்படையில்-அந்த மொழிவழிச் சாதி அடிப்படையில் சண்டைகள் தோன்றி இன்றுவரை வளர்ந்துவந்துள்ளன. இரண்டும் சமம் என்ற அப்பர் கொள்கையினையே சமயக்கண் கொண்டன்றி மொழிக்கண் கொண்டு ஒத்துக்கொள்ளாத நிலையில், வேற்று மொழியாளர் தமிழினும் தம் மொழியே உயர்ந்தது என்றும் கடவுளுக்கு அம்மொழியே உகந்தது என்றும் அம்மொழி பேசுவோரே உயர்ந்தவர் என்றும் வாதிடவும் செயல்படவும் தொ ட ங் கி ன ர். இத் தொடக்கத்துக்கு வித்திட்ட காலம் இப்பல்லவர் காலம். அதனாலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/154&oldid=1358959" இலிருந்து மீள்விக்கப்பட்டது