பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

தமிழர் வாழ்வு


மாட்டு அதிக வேறுபாட்டினைக் கற்பித்து மாறுபாட்டை உண்டாக்கவில்லை என்பதை அப்பர் சம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப்பாணர் போன்றார் வாழ்விலிருந்து அறிந்து கொள்கிறோம்.

ஆட்சிமுறையில் வரி விதிப்பு முதலியவை பற்றிய மாற்றங்கள் சிலவற்றை நம்மால் காண முடிகிறது. எனினும் பிற்காலப் பல்லவர்கள் காலத்தில்தான் நாட்டு ஆட்சியின் நல்ல இயல்புகளையும் முறைகளையும் பரக்கக் காண்கிறோம். தமிழராகவே ஆன சிம்மவிஷ்ணுவின் பரம்பரையினர் ஓரளவு வேற்று மக்கள் வாழ்வின் அடிப்படையில் நின்றார்களேனும், பெரும்பாலும் தமிழர்கள் என்று தம்மை நினைந்து, தமிழ்ச் சமுதாய நெறியிலேயே தம் அரசியலையும் வாழ்வியலையும் அமைத்துக்கொண்டார்கள் எனக் காண்கிறோம். எனினும் அந்த இருண்ட காலமாகிய முற்காலப் பல்லவர் காலத்தில் உண்டான சில சமுதர்ய மாறுதல்கள் தமிழ் மக்களிடம் வேரூன்றி நிலைத்து, இன்றளவும் அவர்களை விட்டு நீங்காமல் வாழ்கின்றன என்பது தேற்றம். இனி இந்த ஆய்வினை விட்டுப் பிற்காலப் பல்லவர் கால வரலாற்றைக் காண்போம்.

சிம்மவிஷ்ணுவின் பரம்பரையினராய மகேந்திரன் தொடங்கி இரண்டாம் பரமேசுவரன் வரையிலும் ஆண்ட அரசர் காலத்தில் நாடு சமயப் போராட்டங்களுக்கு உள்ளாகித் தெளிநிலை பெற்றமை காண்கிறோம். அதற்கு முன் வந்த பல மன்னர் பரம்பரையினர் சிதைந்தும் மாறியும் பிறழ்ந்தும் உழந்தும் தமிழ் மக்களோடு, தம்மையும் உறவுபடுத்திக் கொண்டு, தமிழராகவே மாறிவிட்டனர். அவர்தம் பரம்பரையினர் இன்றும் அம்மரபுப் பெயர்களைச் சிதைந்தும் உறழ்ந்தும் கொளக் கொண்டு முற்றிய தமிழர்களாக மாறிவிட்டனர். அப்படியே ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாறிய பல்லவரும் தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/156&oldid=1358976" இலிருந்து மீள்விக்கப்பட்டது