பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

தமிழர் வாழ்வு


தையில் (முன்பனிக் காலத்தில்) நடைபெறுகின்றது. அந்தக் காலத்திலும் இவ்வாறு பிற காலங்களில் முல்லைத் திணைப் பாடல்கள் வந்ததை அகநானூறு காட்டும், அகநானூற்று 264ஆம் பாடல் முல்லையில் கூதிர் காலமாகிய குளிர் காலம் வந்ததையும் 294 ஆம் பாடல் முல்லையுள் முன்பனிக் காலம் வந்ததையும் காட்டுகின்றன. எனவே கால மாறுபாட்டை நம் கருத்தில் கொள்ளாது, இந்த மஞ்சு விரட்டின் பயன் என்ன என்பதையே காண வேண்டும். மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, நம் தமிழகத்தில் நடைபெற்ற இம் மஞ்சு விரட்டு நல்ல ஆயர்குலப் பெண்களுக்கு மணாளரைத் தேடித் தரப் பயன்பட்டது என்பதையும் வெறும் வேடிக்கைக்கும் ஆரவாரத்துக்கும் அன்று என்பதையும் தெளிதல் வேண்டும்.

பழங்காலத்திய தமிழ் மகளிர் நல்ல வீரர்களையே தம் மணாளராகக் கொள்ள விரும்பவர். 'புலிப்பல் தாலி' என்பதை நாம் அறிவோம். தம்மை மணப்பவர் புலியை வெல்ல அதன் பல்லினையே தம் தாலியாக அணிய வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். இன்றுள்ள பலர்தம் தாலிகளும் அப் புலிப்பல் போலவே செய்யப்பெறுகின்றன. அப்படியே கொல்லேற்றை அடக்கி, அதன் மீதமர்ந்து வெற்றி கண்ட வீரனையே தமிழ்நாட்டு ஆயர் குலப்பெண்கள் மணமகனாகக் கொள்ள விரும்பினர். தமிழ் நாட்டை ஆண்ட சோழன் நல்லுருத்திரனே இந்த உண்மை நிலையினை நமக்கு முல்லைக்கலியின்மூலம் காட்டுகின்றார். நாடாண்ட நல்ல அரசன், தம் நாட்டின் குடிமக்கள் வாழ்வினை நன்கு அறிந்தவன் அல்லனோ! எனவே அவன் நாட்டின் ஆயர்குலப் பெண்டிர் தம் உள்ளத்து உயர்வையும் அவர்தம் உளம் விரும்பிய காதலர்தம் வீரத்தையும் அழகான பாட்டுகளாக —கலிப்பாவாக வடித்து, மறுமையிலும்கூட, கொல்லேறு தழுவ—கோட்டினைப் பிடித்து அடக்க அஞ்சுவானை விரும்ப மாட்டாள் என்று சொல்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/16&oldid=1423894" இலிருந்து மீள்விக்கப்பட்டது