பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மஞ்சு விரட்டு

15


"கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்

புல்லாளே ஆய மகள்"
(முல்லைக்கலி: 3 ; 68 - 64.)

என்பது அவர் வாக்கு. அப்படியே நான்காவது கலியில் பொல்லாத எருதினை அடக்குபவனே ஆயர்மகளைப் பெறும் தகுதி உடையவன் (மற்றவன் பெற மாட்டான்) என்பார்.

"முள்ளெயிற்று ஏஎர் இவளைப் பெறும்; இதோர்

வெள்ளேற்று எருத் தடக்குவான்"
(முல்லை 4 : 18 - 19)

என்பதும் அவர் வாக்கு, எனவே இந்த மஞ்சுவிரட்டல் சங்ககால ஆயர் மகளிர் வாழ்வில் முக்கிய இடம் பெற்று, அவர்களுக்கு உரம் மிக்க நல்ல கணவரைத் தேடித்தந்தது என அறிதல் வேண்டும். இனி, இச் சோழன் நல்லுருத்திரன் பாடல் வழியே ஒருசில கருத்துக்களை—இக் 'கொல்லேறு தழுவல்'—'மஞ்சு விரட்டல்' பற்றிக் கண்டு அமைவோம்.

சோழன் நல்லுருத்திரன் பாடியதாகிய முல்லைக் கலியில் பதினேழு பாடல்கள் உள்ளன. அவற்றுள் முதலில் ஒருசில பாடல்களில் அவர் இந்தக் கொல்லேறு தழுவுதலை—மஞ்சு விரட்டலை நன்கு காட்டி விளக்குகிறார். முதல் கலியில் மாடுகளைத் தழுவுவார் அவற்றால் சிதைவுற, அவர்தம் குடல்களும் நரம்புகளும் அம் மாடுகளின் கொம்புகளில் ஏறி உள்ளமையை உவமைகளாலும் பிற வகைகளாலும் விளக்குகிறார். அந்தக் கொடுமையைக் கண்ட தலைவி, ஒருவேளை, தான் மணக்க இருக்கும் கணவனுக்கும் இக்கதி நேருமோ என அஞ்சுகிறாள். அருகிலிருக்கும் தோழி அவளைத் தேற்றி, தோன்றிய நல்ல நிமித்தங்கள் காரணங்களாலும் தலைவியின் திண்ணிய உள்ள ஆற்றலாலும் அவள் தலைவன் காளையை அடக்கிக் கலியாணம் செய்துகொள்வது உறுதி எனத் தேற்றுகிறாள். தலைவனிடத்தும், அவள் அச்சத்தைக் கூறி, தெளிவு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/17&oldid=1423895" இலிருந்து மீள்விக்கப்பட்டது