பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

தமிழர் வாழ்வு


படுத்தி, எண்ணிய திண்ணியராகப் பெறின் 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப' என்ற குறளின் கருத்தினையும் நினைவூட்டி இருவர்தம் உள்ள உரன் வெற்றியே தரும் என்கிறாள்.

மஞ்சு விரட்டும் தொழுவினுள் அமைந்த உயர்ந்த பரண்களில் பெண்கள் வீற்றிருக்கின்றனர். நன்கு சீவிவிட்ட அழகுபடுத்தப்பட்ட காளைகள் தொழுவிடத்தே விடப்பெறுகின்றன. வீரர்களும் தெய்வங்களை வணங்கித் தொழுவிலே பாய்கின்றனர். ஆயினும் அந்தச் சீற்றமிக்க எருதுகளால் கொல்லப்படுகின்றனர். அந்த எருதுகளின் செயல்களைப் பல உவமைகளால் ஆசிரியர் விளக்குகிறார்.

துரோபதியைத் தொட்ட துச்சாதனனைத் துண்டு துண்டாக்கிய வீமனைப் போலவும், (வரி. 15, 20) ஊழி முடிவிலே கூற்றுவனையும் கூறுஆக்கிக் கூளிக்கு இட்டு ஆர்ப்பரிக்கின்ற உருத்திரனைப் போலவும் (வரி. 21, 26) தன் தந்தையாகிய துரோணரைக் கொன்ற சிகண்டியைச் சிதைத்துத் தலை திருகிய அசுவத்தாமனைப் போலவும் (வரி. 27, 33) அந்த எருதுகள் வென்று நிமிர்ந்து ஆர்ப்பரிக்கின்றன என்கிறார் ஆசிரியர். அவற்றைக் கண்டு அஞ்சிய தலைவிக்கு நல்ல நிமித்தங்களைக் கூறித் தேற்றுவிக்கின்றாள் தோழி.

"கோளானர் என் ஒப்பார் இல்லென நம்மானுள்
தாளாண்மை கூறும் பொதுவன். நமக்கு ஒரு நாள்
கேளாளன் ஆகாமை இல்லை அவற்கண்டு
வேளாண்மை செய்தன கண்" (வரி. 43-46.)

என்பது நல்லுருத்திரன் வாக்கு. அது கேட்டுத் தலைவி தன் தலைவன் வெற்றி பெற்றுத் தன்னை மணப்பான் என்ற திட உளத்தோடு, மற்ற சுற்றத்தாருடன் தன் இல்லம் புகுகிறாள் என்று முதல் பாடலை முடிக்கின்றார் புலவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/18&oldid=1423896" இலிருந்து மீள்விக்கப்பட்டது