பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

தமிழர் வாழ்வு


அக்கோயில்களில் நிலையான கல்வெட்டுக்களையும் எழுதி, உலகப் புகழ் பெற்றுவிட்டார்கள். தமிழ்நாட்டில் முதன் முதல் கல்வெட்டுக்களையும் செப்பேடுகளையும் உண்டாக்கி வரலாற்றுக்கு வழிகோலிய பெருமை இப் பல்வரையே சார்ந்ததாகும். எ ன வே தமிழகத்தில் தெளிந்த வரலாற்றுக்கு அடிப்படை வகுத்த இப் பல்லவரை நாம் என்றென்னும் போற்றக் கடமைப்பட்டவராகின்றோம்.

கலை உலகில் இவர்கள் செய்த மாற்றங்கள் தாம் எத்தனை! வண்ணக் கலவைகள் ஆயிரம் ஆண்டுகள் கழியினும் அழியாதிருக்கும் வகையில் அமைத்துத் தீட்டிய சித்திரங்களை இ ன் று ம் போ ற் று கி றோ ம். மாமல்லபுரத்தின் எழில் மிகுந்த சிற்பங்களை எந்நாட்டவரும் வைத்தகண் வாங்காது பார்க்கும் ஒரு நிலையினைக் காண்கிறோம். கயிலையின் காட்சியையும் வைகுண்டத்தின் காட்சியையும் காஞ்சியில் அமைத்ததோடு, அக்கோயில்களில் என்றும் கண்டு மகிழும் சித்திரக் காட்சிகளையும் வரலாற்றுக் காட்சிகளையும் வடித்த பல்லவர் திறன் போற்றற்குரியதாகும். பல்லவ மல்லன் ஆட்சிக்கு வந்த வரலாற்றை வைகுந்தப் பெருமாள் கோயில் சுவர்கள் அல்லவோ இன்றும் நம்மோடு பேசி விளக்கிக் கொண்டிருக்கின்றன? 'கல்லும் சொல்லாதோ கவி' என்ற பாட்டின் அடியும் இவர் வடித்தெடுத்த கல்வெட்டுக்களைப் பற்றி எழுந்த அடியாகவன்றோ கொள்ள வேண்டும்? பல்லவர் சென்ற இடமெல்லாம் அவர்தம் கைவண்ணத் திறனும் அத்திறன் வளர்ச்சி அடைத்த வகையும் கொண்டன்றோ இன்றைய வரலாற்றாசிரியர்கள் அவரவர் காலத்தையும் அக்காலத்தை ஒட்டிய நாட்டு வரலாற்றையும் கணக்கிடுகிறார்கள்? இப்படி ஒரே சமயத்தில் கலையையும் வரலாற்றையும் பிணைத்து வளர்த்த அவர்தம் பெருமையைப் பேசாதிருக்க முடியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/160&oldid=1359023" இலிருந்து மீள்விக்கப்பட்டது