பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர்கால வரலாறு

159


பிற்காலப் பல்லவர் காலத்தில் தமிழ் இலக்கியமும் இலக்கணமும் நன்கு வளர்ந்தன எனக் கொள்ளலாம். 'நந்திக்கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்' என்ற மரபு வாக்கியப்படி, நந்திவர்மனின் தமிழ் உணர்வை உலகு நன்குணர்ந்துள்ளது. இன்றுவரையில் வாழ்ந்து சிறந்தனவாகப் போற்றப்படும் சைவ இலக்கியங்களில் ஏழு அல்லது எட்டுத் திருமுறைகளும் வைணவ நாலாயிரத்தின் பெரும் பகுதிகளும் இக்காலத்தில் எழுந்தனவன்றோ? இதனாலன்றோ அத்தெய்வ நெறி பாடும் இலக்கியத்தில் பல்லவர் இடம் பெற்றுச் சாகாவரம் பெற்று வாழ்கின்றனர்? பல்லவருக்கு மாறுபட்டவரைத் தம் இறைவன் மறுக்கம் செய்து பல்லவரை வாழவைக்கவேண்டும் என்ற உணர்வைச் சுந்தரர்,

"உரிமையால் பல்லவர்க்குத் திரைதொடா
மன்னவரை மறுக்கம் செய்யும்
பெருமையால் புலியூர் சிற்றம்பலத்தெம்
பெருமானைப் பெற்றா மன்றே"

என்று பாடி இறைவன் பல்லவர் வாழ வழி வகுத்தவன் என்பதைக் காட்டுகின்றாரன்றோ? 'பாரூர் பல்லவனுார் மதிற்காஞ்சி' என்று தேவார அடியவர்கள் காஞ்சியை நினைக்கும்போதே அதைப் பல்லவனுார் என்றே போற்றிப் புகழ்கின்றனரே! வைணவ ஆழ்வார்களும் இவர்தம் தொண்டுகளைப் பாடிப் பரவியதை முன்னரே கண்டோம். இன்னும் எத்தனையோ காணலாம்.

ஆயினும் பல்லவர் காலச் சமயம் பற்றிக் காணத் தனிப் பிரிவே இருக்கும் இறைய ஆய்வு நிலையில் அது பற்றி அதிகம் சொல்ல வேண்டா.

சமய இலக்கியங்கள் அன்றிப் பாரத வெண்பா போன்ற இலக்கியங்களும் தண்டி அலங்காரம் போன்ற இலக்கணங்களும் உண்டான காலமும் இப் பிற்காலப் பல்லவர் காலமே. {{Nop}}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/161&oldid=1359030" இலிருந்து மீள்விக்கப்பட்டது