பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

தமிழர் வாழ்வு


அவர் காலத்தினை 'இலக்கியப் பிரிவு' தெளிவாகக் காட்டும். எனவே மேலே செல்லுகிறேன்.

சமுதாய வாழ்விற்குப் பல்லவர் செய்த தொண்டு மிக அதிகமானதாகும். அவர்கள் பெயருள் ஒன்றாகிய 'காடு வெட்டி' என்பதற்கு ஏற்ப அன்று தொண்டை நாட்டில் முற்றியிருந்து காடுகளையெல்லாம் வெட்டி, நாடாக்கி மக்களைக் குடியேற்றி வாழவைத்த பெருமை இப் பல்லவருக்குண்டு. 'காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கிய பண்டைச் சோழனாகிய கரிகாற்பெரு வளத்தானுக்குப் பிறகு, தொண்டைநாட்டைப் பொறுத்த வரையில் பல்லவரே அப்பெரும் பணியைச் செய்தனர். அவர்கள் பெயராலேயே திரையன் ஏரி, மாமண்டுர் ஏரி, மகேந்திர தடாகம் போன்ற பல நீர்த் தேக்கங்கள் அமைந்துள்ளன. அவை அவர்கள் செய்த அரும்பணிகளையும் அவற்றின்வழி மக்களின் உணவுப் பிரச்சினைக்கு உரிய தீர்வினைக் கண்ட அவர்களின் உயர்வினையும் நமக்கு நினைவூட்டுகின்றன. இப்பாசன வசதி பற்றியே டாக்டர் மீனாட்சி அவர்கள் தனிப்பகுதி (Ch. VII-water Supply and irrigation) எழுதி அவர்தம் இத்தகைய செம்மைத் தொண்டினை நன்கு விளக்கியுள்ளார்கள். இவ்வாறு ஏரிகள் அமைத்ததோடு அமையாது, பல்லவர்கள் அந்த ஏரிகளுக்கு நீர் வருவாய்க்காகப் பல கால்வாய்களையும் வெட்டுவித்தார்கள் என்றறிகிறோம். சில இன்னும் உள்ளன. இந்தப் புது நீர்ப்பாசன வசதிகளுக்காக மக்களிடம் வரி வசூலித்து நாட்டை மேலும் வளப்படுத்தினார்கள் எனவும் அறிகிறிறோம். சங்க காலத்துக்குப் பின் மங்கிக்கிடந்த தொண்டைநாட்டைப் பல வகையில் சேப்பம் செய்த அதே வேளையில், அத்திருத்தப் பணிகளுக்கெல்லாம் பல வரிகளையும் இட்டு வசூல் செய்து நாட்டு வளத்தைப் பெருக்கிய பல்லவர் சமுதாயப் பணியை எல்லா வரலாற்றாசிரியர்களும் போற்றுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/162&oldid=1358665" இலிருந்து மீள்விக்கப்பட்டது