பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

தமிழர் வாழ்வு


அடங்கியுள்ளன. நீரில் நான்கும் நெருப்பில் மூன்றும் காற்றில் இரண்டும் விண்ணில் ஒன்றும் முறையே அடங்கி உள்ளன. இதையே மாணிக்க வாசகர்,


‘பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய்விளைந்தாய் போற்றி’

எனப் போற்றித் திருஅகவலில் இறைவன் மேல் ஏற்றிக் கூறுகின்றார். இந்தப் பஞ்ச பூதச்சேர்க்கையாகிய உலகம் என்று தோன்றிற்று என்று கணக்கிட முடியாத வகையினை அப்பரடிகள், அம் மண் (பிருதிவி) தலங்களான திருவாரூரிலும் காஞ்சியிலும் எண்ணிப் பார்க்கிறார். (இன்றும் ஈரிடத்தும் இறைவன் புற்றாகவும் மணல் இலிங்கமாகவும் இருப்பதை யாவரும் அறிவர்) எண்ணம் பாட்டாக வருகின்றது.


‘ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
     ஒருருவே மூவுருவம் ஆன நாளோ
கருவனாய்க் காலனை முன் காய்ந்த நானோ
     காமனையும் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் விண்ணும் மண்ணும் தெரிந்த நாளோ !
     மான்மறிக்கை யேந்தியோர் மாதோர் பாகம்
திருவினான் சேர்வதற்கு முன்னோ பின்னோ
     திருவாரூர் கோயிலாகக் கொண்ட நாளே !’

என்றும்,

“திசையெட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாகக் கொண்ட நாளே”

என்றும் பாடி, அந்த மண்ணும் அதன் மூலமாகிய விண்ணும் தோன்றிய நாள் எண்ணிக் காண முடியாத ஒன்று எனக் குறிக்கின்றார். அப்படியே காஞ்சியில், கச்சி மயானத்தில் நின்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/172&oldid=1359111" இலிருந்து மீள்விக்கப்பட்டது