பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

தமிழர் வாழ்வு


இன்னும் ஆராய ஆராய எத்தனை எத்தனை உலகங்களோ நம் ஆய்வில் புலனாகும்!

வள்ளுவர் 'அறிதோறறியாமை கண்டற்றால்' என்று காமத்துப்பாலில் காட்டிய உ வ மை இந்த ஆய்வு உலகுக்கும் பொருந்தும். நாம் ஐந்து கல் தொலைவினைக் கண்டபோது காணாதது ஐம்பது கல்லாக இருந்தது. ஐம்பதைக் கண்ட பின்காணாதது ஐந்நூறு—ஐந்நூறு கண்ட பின் ஐயாயிரம் — ஐயாயிரம் கண்ட பின் ஐம்பதாயிரம் — ஐம்பதாயிரம் கண்டபின் காணாதது ஐந்து லட்சம் கல் தூரமாக நின்றது. இப்படியே விண்ணொளியினை ஆராய ஆராய அது விரிந்துகொண்டே — அறியாத எல்லை விரிவாகிக்கொண்டே போகிறது. இவை தோன்றிய கால எல்லையும் தெரியாது. அண்மையில் ஓர் அறிவியல் ஆய்வாளர் அண்ட கோள எல்லையினை அடுத்த நூற்றாண்டில் கண்டுவிடலாம் எனச் சில ஆண்டுகளுக்கு முன் எழுதியதைப் படித்தேன். ஆனால், நான் திட்டமாகக் கூறுவேன்—என்றென்றும் அண்ட கோள எல்லையினை மனிதனால் அறுதியிட முடியாது. இது நான் கூறிய கூற்று அன்று நல்ல பெரியவர்கள் கண்ட முடிவு.

மாணிக்கவாசகர் இந்த அண்டகோளத்தின் ஒரு பகுதியில் அமைந்த உலகங்களை — உருண்டைகளை எண்ணிப் பார்க்கிறார். அவரால் அளவிட முடியவில்லை. ஒர் உவமையாலே ஓரளவு சுட்டிக்காட்டுகிறார். ஒரு குடிசை—அதில் கூரையில் ஒரு துவாரம்—அதன் வழி சூரியன் ஒளி விழுகிறது. அந்த ஒளிக் கீற்றில் எத்தனை எத்தனையோ தூசுகளைக் காண்கிறோம். அவற்றை எண்ண முடியவில்லை. கண்ணுக்குத் தெரிவன பலகோடி—காணாதன இன்னும் பலப்பல. இதைக்காட்டி இது போன்று அளவிட முடியாத உருண்டைகளை உடையதே அளவிட முடியாத அண்டகோளம் என்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/174&oldid=1358801" இலிருந்து மீள்விக்கப்பட்டது