பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

தமிழர் வாழ்வு


கருவளர் வானத்து இசையில் தோன்றி
உருவ அறிவாரா ஒன்றன் ஊழியும்
முந்து வளி கிளர்ந்த ஊழ் ஊழ் ஊழியும்
செந்தீச்சுடரிய ஊழியும் பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று
உள்முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
உள்ளிடாகிய இருநிலத்து ஊழியும்
நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய
செய்குறி ஈட்டங் கழிப்பிய வழிமுறை
கேழல் திகழ்வரக் கோல மொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின் முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா
ஆழி முதல்வ நிற் பேணுதும் தொழுது

(2ஆம் பரிபாடல் - 1. 19)

இதில் ஐவகை ஊழியினைக் காட்டி, அவற்றின் விரைந்த கால எல்லையினைக் காட்டி, அவற்றிற்கெல்லாம் மூல காரணமாய் நின்ற மூர்த்தியினை எண்ண வைக்கிறார் ஆசிரியர். இதில் நெய்தல், கமலம், ஆம்பல், சங்கம், வெள்ளம் என்பன மனிதன் செய்குறிவழிக் கண்டறியாத கால எல்லை – ஒவ்வொன்றும் கோடி கோடி ஆண்டுகளுக்கு அப்பாற்பட்டன. எனவே இந்தக் கணக்கிட முடியாத கால எல்லையில் – ஊழிகள் பல கழிய அவற்றில் விடப்பட்ட நிலத்தில்தான் நாம் வாழ்கிறோம். இந்த நிலையில் அண்மையில் மறைந்த பகுதியே ‘குமரிக் கண்டம்’.

வடமொழி வாணர்கள் இவற்றைப் பல்வேறு ‘மனு அந்தரங்களாக’ அறுதியிடுவர். வைவஸ்தம்-மன்மந்தரம் எனப் பலவகையில் கணக்கிடுவார்கள். ஆக ஊழிகள் பல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/176&oldid=1423805" இலிருந்து மீள்விக்கப்பட்டது