பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

தமிழர் வாழ்வு


"பொதுவனோடு ஆய்ந்த
முறுவலாள் மென்தோள் பாராட்டிச் சிறுகுடி

மனறம் பரந்தது உரை"
(937-38)

என முடிகின்றது பாட்டு.

மூன்றாவது பாட்டிலேயும் இந்த ஏறுதழுவல் விளக்கமாகப் பேசப் பெறுகின்றது. தொழுவில் ஆயர்மகளிர் கூடியுள்ளனர். தலைவியும் தோழியுடன் சென்றாள். ஏறுகள் சீறிப் பாயும் வகையில் நிறுத்தப்பெறுகின்றன. வீரர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். கரிய, வெளிய, சிவந்த, பல நிறக் காளைகள் மூன்றாம் பிறை போன்ற சீவிய கொம்புகளை உடையனவாக நிற்கின்றன. எருது மற்றவன் குடர்களைக் கொம்பிடைச் சுற்றி நிற்க, தலைவன் அந்த எருதினை அடக்கி, அந்தக் குடர்களைப் பிடுங்கி வெற்றி கொண்டதனைத் தலைவிக்குத் தோழி காட்டுகிறாள். இவ்வாறே வெற்றி கொண்டார் பலர் அத் தொழுக் களத்திலே உள்ளார் எனவும் குறிக்கின்றார்.

ஒரு தலைவன் வெள்ளை எருதை அடக்கி அதன் உடலோடு ஒட்டிய நிலையினை, வெள்ளிய திங்களில் தோன்றும் மருவுக்கு ஒப்பிடுகிறார் புலவர்.

"இகுளை இஃதொன்று கண்டை; யிஃதொத்தன்
புல்லினத்து ஆயர்மகனன்றே—புள்ளி
வெறுத்த வயவெள்ளேற்று அம்புடைத் திங்கள்

மறுப்போல் பொருந்தி யவன்"
(முல்லை 3 : 46-49)

என்பது கவியின் வாக்கு. அப்படியே கம்சன் வரவிட்ட குதிரை வென்ற கண்ணனையும் பிறரையும் உவமையாகக் காட்டுகிறார். இவ்வாறு பல காட்டி, ஆயர் மகள் மணம் கூடும் சிறப்பினைப் போற்றி, அந்நாட்டு மன்னனாம் பாண்டியனையும் வாழ்த்தி, தெய்வத்தைத் போற்றுவதற்காகத் தலைவியை அழைத்துச் செல்கின்றாள் தோழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/20&oldid=1423925" இலிருந்து மீள்விக்கப்பட்டது