பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மஞ்சு விரட்டு

19


பின் நா ன் கா வ து பாட்டிலேயும் இத்தகைய 'கொல்லேறு தழுவுதலை'—மஞ்சு விரட்டலைக் காட்டித் தலைவன் வெற்றி பெற்றமையின் குரவையாடி, அவன் வெற்றியை போற்றிக் கூற, தலைவிக்கு அதுவரை இருந்த அலராகிய பழிச் சொல் நீங்கிய தன்மையினையும் அவள் எண்ணியது நிறைவுற, பின் கூத்துள் பாடி ஆட, தலைவனுக்குத் தலைவியின் சுற்றத்தார் மணக்கொடை நேர்ந்ததையும் விளக்குகிறார். இன்னும் சில பாடல்களும் உள்ளன. விரிவஞ்சி இத்துடன் நிற்போம்.

இவ்வாறே அந்தப் பழைய காலத்தே கொல்லேறு தழுவதலாகிய மஞ்சு விரட்டு நிகழ்ந்தது என அறிதல் வேண்டும். ஒரு வேளை தலைவி விரும்பியவன் ஏறு அடக்காது, வேறு யாராவது அடக்கினும் அவனுக்கு அவளை மணம் செய்விப்பதும், ஒரோ வழி உண்டு போலும். அதை 'ஆசுரம்' என்னும் மணத்துள் அடக்குவர் நச்சினார்க்கினியர்.

'மஞ்சு விரட்டு' என்னும் 'கொல்லேறு தழுவல்' இவ்வாறு பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ்நாட்டு வீரர் மரபினை விளக்கவும் ஆயர் மணமுறையை அறிவிக்கவும் நடைபெற்று வந்தெனவும். பின் கால இடையீட்டால் பலவகையில் மாறி இன்று 'சல்லிக் கட்டாக', மஞ்சுவிரட்டாக வெறும் விளையாட்டு வகையில் அமைந்துள்ளதெனவும் அறிதல் வேண்டும். இடைக்கால—தற்கால இலக்கியங்களில் இந்த முறை அதிகமாகப் பேசப்பெறாவிடினும் இது தொன்மையானது—வீரம் பற்றியது,— தமிழர் பண்டை மரபு பற்றியது என உணர்தல் வேண்டும்.{{Nop}}

(பிப்ரவரி-1989).
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/21&oldid=1358333" இலிருந்து மீள்விக்கப்பட்டது