பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

தமிழர் வாழ்வு


ஏடுகள் எத்தனை - எழுதிய பாடல்களோ பலப்பல. ஆயினும் அவை அனைத்தும் இன்று மறைகின்றன. காலத்தேவன் அவற்றைப் போசுக்கும் அறப்பணியில் ஈடுபட்டுள்ளான் என அறிகின்றோம்.

துறவு நிலையில் உள்ளவர்களும் சில வேளைகளில் நிலைதளர்வர். அவர்தம் தளர்ச்சியைக் கண்டு நாடு நகைக்கும் - சிலசமயம் நடுங்கவும் நடுங்கும். பாவம்! பெண்மை இன்பத்தை விடவும் மனமின்றி - விலகவும் மனமின்றி - போலித்துறவில் வாழும் துறவியர் கோலம் நகைக்கத்தக்கதன்றோ! அறம் உரைத்த வள்ளுவனார் இதனாலன்றோ 'கூடா ஒழுக்கம்' என்ற தலைப்பிலேயே அவர் தம் குறையை உலகுக்குக் காட்டினார். 'அறன் எனப்பட்டதே இவ்வாழ்க்கை' என்று காட்டி, காதன் மனையாளொடு கலந்து வாழும் வாழ்வே மக்கள் வாழ்வு என்பதை விளக்கி, அவர் உலகுக்கு அறம் உரைத்தாரன்றோ! மனிதன் மேற் கொள்ளும் வேண்டாத்துறவு நிலையை - பிற உயிரினங்கள் மேற்கொள்கின்றனவா என்பது ஐயமே. இயல்பாகப் பெண்மையோடு இயைந்து வாழும் வாழ்க்கையே வையத்து வாழ்வு என்பதைக் கூறாத பெரியவர் உண்டா?-காட்டாத சமயம் உண்டா?-கருத்தில் உணர்ந்து உணர்த்தாத உரவோர் உண்டா?

மேலும் ஆண் உள்ளத்திலும் பெண் உள்ளமே நல்லற மாற்றுவதற்கும் கடவுள் உணர்வைப் பெற்று உய்வதற்கும் ஏற்றது என்பதைப் பல அறிஞர்களும் நன்கு காட்டியுள்ளனர். ஆடவராகப் பிறந்தவரும் ஆண்டவனை அடைய வேண்டுமானால் பெண்ணுள்ளம் பெறவேண்டும் என்பதைத் 'திருவாசகம்' நமக்குக் காட்டவில்லையா! மகனாகப் பிறந்த மாணிக்கவாசகர் தம்மை மறந்து 'மகளா'கி மையல் கொண்டு இறைவனைத் தலைவனாகப் பாடிப்பாடி அவன்பதம் பெற்ற வரலாறு சைவரை மட்டுமன்றித்தம் சமயம் பரப்ப வந்த மேலைநாட்டுக் கிறித்தவப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/26&oldid=1358181" இலிருந்து மீள்விக்கப்பட்டது