பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

தமிழர் வாழ்வு


படையிலேதான் 'இல்லாள்' என்ற சொல் மனைத் தலைவியைக் குறித்து எழுந்ததென அறிஞர் கூறுவர். மங்கையர்க்கரசியும் சீதையும் கஸ்தூரியும் கணவரொடு கலந்து வாழ்ந்தே தங்கள் மேன்மையை உலகுக்கு நிலை நாட்டினர். துறவு நிலையில் வாழ்ந்த எங்கோ விரல் விட்டு எண்ணத் தகுந்த ஒருசில பெண்கள் தவிர்த்து உலக வரலாற்றிலேயே துறவால் வாழ்வில் வெற்றி கண்டவர்களைக் காண முடியுமா? இன்றைய எலிசபெத் இராணியும் அவர் போன்றாரும் கணவரொடு கலந்து வாழ்வதையே 'பெண்மை'யின் பெருமை எனக் கருதி வாழ்கின்றனர்; அதுதான்பெண்மையின் பெரு நெறியானமையின். ஆனால் மணம்புரிந்துகொண்டும்—பெயருக்குக் கணவனெனக் கருதி— தம்மனம் போன வாழ்வில் வாழ்ந்துவருவதை நாகரிகமாக எண்ணுபவரும் இருக்கின்றனர். இன்னும் சிலர் 'மணமே வேண்டாம்' எனக் கூறிக்கொண்டே தனித்த வாழ்வில் தம் காலத்தை தள்ளுகின்றனர். இவர்தம் வாழ்வெலாம் பெண்மையின் தன்மைக்குப் பொருந்துமா என்பதை நாம் ஆராய வேண்டா. அவர்தம் அத்தகைய வாழ்வுக்கு எத்தனையோ காரணங்களைக் காட்டுவர். அவர்களை மணந்துகொள்ள ஆடவர் கேட்கும் 'தண்டத் தொகை' அவர்களாலோ அவர்தம் பெற்றோராலோ ஈடு செய்ய முடியாத ஒன்று. அவர்கள் குடும்பம் இக்குலப்பெண்டிர் வருவாயாலேயே வாழவேண்டிய நிலை. இன்னும் எத்தனையோ காரணங்களைக் காட்டலாம். இவற்றிற்கு ஆண்கள் ஓரளவு பொறுப்பாளிகளே என்றாலும் பெண்கள் தம் பெண்மை நலம் கெடா வகைக்கு அக்காரணங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியவைதாமோ என எண்ணிப் பார்க்க வேண்டும். இக்காரணங்களே அடிப்படை உண்மையாயின் வாழ்வும் வளமும் பெற்ற பெண்கள்—செல்வர் வீட்டுச் செல்வியர்—செலவுக்கே தேவையில்லாத மகளிர்—இவர்களும் மற்றவர்களைப் போன்று ஏன் உழல வேண்டும். பெண்மையின் தெய்வ நலம்—தாய்மையின் மேன்மை—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/30&oldid=1358188" இலிருந்து மீள்விக்கப்பட்டது