பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பெண்மை?

33


அணைத்துக் கொள்ளப் பெறுகிறார். இதற்கு விடை என்ன?

வடநாட்டு மீராபாய் கதையும் இது போன்றதுதானே. கொண்ட கணவன் இருக்க வேற்றுச் சமயத் தெய்வமாகிய பரந்தாமனை எண்ணி எண்ணி உருகி ஓலமிட்ட செய்தி சமய உலகம் அறிந்ததுதானே. மேலை நாட்டு யோசேபு மரியம்மையின் வாழ்விலும் இத்தகைய புரியாத புதிர் தானே இயேசுவைத் தருகிறது. இவையெல்லாம் வெறும் கதைகள் என்று தள்ளவும் கூடவில்லையே. கொள்ளவும் முடியாத நிலையன்றோ! இத்தகைய செயல்களையெல்லாம் எண்ணும்போது பெண்ணுள்ளத்தில் அரும்பும் 'பாச உணர்வு' பல நிலைகளைக் கடந்த ஒன்று என்பது தான் புரிகின்றது. ஆயினும் அது சரியா தவறா? யார் பதில் சொல்வர்?

கடவுளரொடு கொண்ட தொடர்புகள் இருக்கட்டும். இன்றும் உலகில் எங்கோ ஒரு சிலர் இவ்வாறு மாற்றம் பெற்று ஒருமை உணர்வுபெற்றுக் 'காதல் இன்றேல் சாதல்' என்று மடிவதைச் செய்தித்தாள்களில் படிக்கின்றோம்! மீராவையும் காரைக்காலம்மையாரையும் போற்றிப் புகழும் சமுதாயம் இவர்களை துாற்றக்காரணமில்லை என்பது தெளிவு. என்னவாயினும் இவை விளக்க முடியாதவை - உயர்ந்த நெறியைச் சார்ந்தவை - அல்லது - மனித உணர்வுக்கு அப்பாற்பட்டவை - என்று விதி விலக்கினைச் செய்து மனிதப் பெண்மை இவற்றின் அடிப்படையிலன்றி முன் கண்ட வாழ்வின் அடிப்படையில் அமைதலே சாலச் சிறந்தது எனக் கொண்டு மேலே செல்லலாம்.

இன்றைய உலகச் சூழ்நிலையில் பெண்மையின் வாழ்வுக்கு எத்தனையோ குறைபாடுகள் நேர்ந்தபோதிலும் அம் பெண்மையின் அடிப்படையாகிய செம்மை கெடாமலேயே வாழ்கின்றது என்பது உணரக்கூடியதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/35&oldid=1358212" இலிருந்து மீள்விக்கப்பட்டது