பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பெண்மை?

35


வதையும் அந்த வாழ்விலேயே—அதில் பெறும் இன்ப துன்ப நெறியிலேயே உயிர் வாழக் கடமைப் பட்டதென்பதையும் அறியாதவர் யார்? 'மக்கட் பேறு' மற்றெவற்றிலும் மேம்பட்ட தென்பதைத்தானே வள்ளுவர்,

'பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த

மக்கட்பே றல்ல பிற'

எனப் பாராட்டிக் காட்டியுள்ளார்.

இத்தனையும் கற்றும் கேட்டும் ஒன்றும் அறியாதவர் போல அனைத்தின்பமும் ஒதுக்கத் தக்கன எனப் பேசுபவர் உளராயின் அவர்களை என்னென்பது? இவ்வாறு பேசுபவர்தம் தனி வாழ்க்கையை ஊன்றிக் காண்போமாயின் நான் முன்காட்டிய குறையினைக் கண்டே தீருவோம்.

இத்தகைய பெண்மை நலம் தோய்ந்த பெண்ணினம் உலகம் தோன்றிய நாள் தொட்டு வாழ்ந்து சமுதாயத்தையும் வாழவைத்து வருகின்றது. சமுதாயத்தை வளர்ப்பதே, பெண்ணினந்தானே. அப்பெண்ணினம், தான்வாழும் நாடு, ஊர், சூழல், தட்ப வெப்ப நிலை முதலிய புற நிலைகளுக்கு ஏற்பத் தன் வாழ்வுத்தன்மையை வளர்த்துக் கொள்ளுகிறது. புல் தொடங்கி மனித நிலை வரையில் எல்லா உயிர்களுக்கும் இந்நிலை பொருந்தும். சமுதாய வாழ்வில் எல்லா உயிரினங்களும் சமமே. அதிலும் பெண்மை யாண்டும் நீக்கமற நிறைந்துள்ளது. அதனாலேயே உலகம் செழிக்க 'பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா' எனப் பாரதி முழங்குகின்றார். ஆம்! பெண்மை வாழ்ந்தால் தான் வையம் வாழும். உயிரினம் ஒங்கும் - சமுதாயம் செழிக்கும் - வாழ்வாங்கு வாழும் நல்நெறி நாட்டிலும் உலகிலும் மலரும். இத்தகைய பெண்மைக்கும் சமுதாயத்துக்கும் உரிய தொடர்பினை இ னி த் தொடர்ந்து காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/37&oldid=1358234" இலிருந்து மீள்விக்கப்பட்டது