பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பெண்மை?

37


தந்துள்ளனரன்றோ! கணவனுக்கு எதிராக அவன் கூறுமுன் தானே எல்லாம் அறிந்ததாகக் கூறின், ஊரையும் உலகையும் சுற்றிவரும் அவனுக்கு தான் கண்டதைக் கூறும் அவாவினைத் தகைந்ததாகாதோ? அவன் கூறிய அனைத்தையும் அறியாதவள்போன்று கேட்டு அவன்மகிழப் பின் தான் உணர்ந்ததைக் கூறின் அவன் எவ்வளவு மகிழ்வான்—அவர்தம் இல்லற இன்பம் எத்துணை ஏற்றம் பெற்றுச் சிறக்கும்?

அச்சமும் அப்படியே 'பயந்து சாக வேண்டும்' எனப் பொருள் கொள்ளப்படுகிறது. வள்ளுவர் 'அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்' என்கின்றாரே அதன் கருத்தென்ன? உலகாளும் மன்னவன் கோலுக்கு முன் அஞ்சாது அறமுரைத்த வீரபத்தினி கண்ணகி, காட்டில் தூர்த்தர் 'உடன் வயிற்றோர்கள் தலைவி தலைவனாவ தெவ்வாறு' என்றபோது எவ்வளவு அஞ்சிக் கவுந்தி அடிகளின்பின் ஒதுங்கினாள் என அறிகின்றோம். அந்த அச்சம் இல்லாமையினாலன்றோ இன்றைய மகளிர் சமுதாயம் மங்கி அழிகின்றது.

பயிர்ப்பும் அத்தகையதே .அது மகளிர் தனி உடைமை. அப் பயிர்ப்பே அவர்தம் பண்பினை வாழ வைத்து இல்லறத்தை ஏற்றமுறச் செய்கிறது. இதை உணர்வார். மிகச் சிலரேயன்றோ! இதனாலன்றோ பெண்மை பீடு நடை போடுகிறது.

மலர்ந்த பெண்மையின் இல்வாழ்வைப் பாடாத புலவரே இல்லை. தமிழில் மட்டுமன்றிப் பிற எல்லா மொழிகளிலும் இவ் வாழ்வின் ஏற்றும் பேசப்படுகின்றது. கடவுளைப் பாடவந்த புலவர் குமரகுருபர் உமையின் சிறப்பினை எண்ணி,

"கனகமார் கவின்செய் மன்றில்
அனகாநா டகற்கெம் அன்னை
மனைவி தாய் தங்கை மகள்"
(சிதம்பர - செய் - கோவை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/39&oldid=1358246" இலிருந்து மீள்விக்கப்பட்டது