பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

தமிழர் வாழ்வு


எடுத்தாளும் வள்ளுவர், இதன் அருமை பெருமைகளை அறிந்து, நூல் முழுவதிலும் ஒரே இடத்தில் மட்டும் எடுத்தாண்டு.போற்றியிருப்பது எண்ணி எண்ணி-அதன் சிறப்பறிந்து மகிழ வேண்டிய ஒன்றாகும்.

‘பண்ணன்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்ட மில்லாத கண்’

- (குறள்-573)

இதில் உலகியல் நடைபெற அடிப்படையான கண்ணோட்டம் என்ற ஒன்றினை வள்ளுவர் விளக்குகிறார். உலகில் அக்கண்ணோட்டம் அருகி விட்ட காரணத்தாலேயே, மக்களுக்குத் தெரிந்த வேறொன்றினைக் காட்டி விளக்க நினைக்கிறார். தெரிந்த பொருளைக் காட்டி, அதே போன்றுள்ள தெரியாத ஒன்றினை விளக்குவது தானே உவமை. இங்கே, ‘பண் என்னாம் பாடற்கியைபின்றேல்’ என்பது உவமையாகின்றது. எனவே இது உலகறிந்த ஒன்று என்பது தேற்றம். பண்ணொன்றப் பாட்டிசைக்கும் மரபு நாடறி வழக்கு என்பதை வள்ளுவர் சொல்லாமல் சொல்லிவிட்டார். வள்ளுவர் காலத்தில் உவமை கூறும் அளவிற்கு உலகறிந்ததாக இருந்த ஒன்று, பின், காலத்தால் அருகிவிட்டது போலும். சங்க காலத்திலும், வள்ளுவர் காலத்திலும் நாடெங்கும்-ஊரெங்கும் பட்டி தொட்டிகளிலும் பட்டினங்களிலும் பரவி, மக்கள் உள்ளங்களை மகிழச் செய்த ஒன்று மாற்றார் படையெடுப்பாலும். மாற்று அரசுகளாலும், பிற மொழியும் இசையும் பிறவும் ஆட்சி செலுத்தியமையாலும் மெல்ல மெல்ல மறையலாயிற்று போலும். எனவேதான் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றி, மறுபடியும் ஊர்தோறும் சுற்றி உழன்று மக்களிடையில் பண்ணொன்ற இசை பாடி, அப்பண்ணுக்கு உயிர் ஊட்டினார்கள் என எண்ண வேண்டியுள்ளது. எனினும் மறுபடியும் அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/56&oldid=1356258" இலிருந்து மீள்விக்கப்பட்டது