பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தமிழர் வாழ்வு


பண்ணையும் அதன் வழியே பெயருற்ற பண்ணனையும் இப்பண்ணாராய்ச்சி மண்டபத்தே மறக்க முடியுமா?

அப்பண்ணன் சிறுகுடிக்குரிய - படப்பைக்குரிய சாதாரண மனிதனாக, சிற்றுாரின் தலைவனாக இருப்பதைக் காண்கிறோம். ஏதோ ஒதுக்கப்பெற்ற ஓரிடத்தில் - ஒரு சிற்றூரில் அவன் வாழ்ந்தவனாதல் வேண்டும். இன்றும் மலைவாழ் மக்களிடத்தில் பண்ணன், பண்பன், பண்பி போன்ற மக்கட் பெயர்கள் வழக்கத்தில் இருப்பதை நாம் அறிகிறோம். (மலைவாழ் மக்கள் மாண்பு - அ. மு. ப.) இவர்களைப் போன்றே அப்பண்ணனும் எங்கோ சிறுகுடிப் படப்பையில் தங்கி, தன்னை மறந்த பண்பாடும் தும்பியாக - தும்பிகளுக்கிடையில் தானும் பண் பாடும் பண்புடையவனாக வாழ்ந்தவனாதல் வேண்டும். ‘அப் பண்ணனைப் பாடேனாயின் எனக்குப் பாண்டியன் வரிசை நல்காது ஒழிக’ எனப்பாண்டிய நாட்டுப் புலவர் மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் பாடினார் (புறம்-388) என அறியும்போது மகிழ்ச்சி பிறக்கிறது. மேலும் சோழநாட்டை ஆண்ட மன்னன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ‘யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய’ (புறம்-173) எனத் தன் வாழ்நாளையே அவனுக்குக் கொடுப்பதாகக் கூறித் தன்னிலும் தண்ணளியாளன் பண்ணன் நெடிது வாழின் நாடும் உலகமும் நலமுற்று, பண்பாடுற்றுச் சிறக்கும் எனக்காட்டிய நிலையை எண்ணாதிருக்க முடியுமா? எதற்காக அவன் நெடிது வாழ வேண்டும்? ஏன் நாடாண்ட பெரு மன்னனே அப்படி அவனுக்குத் தன் வாழ்நாளை நல்க முன் வர வேணடும்? ஆம், அப்பண்ணன் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் (அகம்-54) பசிப்பிணி மருத்துவன் (புறம்-173). எனவேதான், அவன் சிறுகுடி நாடிச் சென்று பெருமன்னன் அவ்வாறு வாழ்த்துகிறான். மற்றொரு புலவர் கோவூர் கிழார் அவன் நாட்டினை நாற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/58&oldid=1356268" இலிருந்து மீள்விக்கப்பட்டது