பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

தமிழர் வாழ்வு


சிறப்பாக இந்த அண்ணாமலை மன்றத்தில் நடைபெறுகின்றன. நாட்டில் பல ஊர்களில் தமிழ் இசைச் சங்கங்களும் தோன்றியுள்ளன. ஒரு சில இதழ்கள் தமிழிசை வளர வேண்டுமென எழுதுகின்றன. இருந்தும் தமிழ் நாட்டில் அதன் பரம்பரையான நல்லிசை ஏன் வளரவில்லை? வாழ வேண்டிய வகையில் வாழவில்லை? தமிழ் நாட்டில் தமிழ் இசை – தமிழ்ப் பண் வளரவில்லை என்றால் வேறு எங்கே அது வளரும்? வாழும்? தமிழ் நாட்டில் ‘எங்கும் தமிழ்’ ‘எதிலும் தமிழ்’ என்று அரசியல்வாதிகளும் அறிஞர் சிலரும் மேடை தோறும் முழங்குவதையும் கேட்கிறோம். ஆனால், தமிழ் எங்கே வளர்கிறது? அப்படியேதான் தமிழிசையும் வளர்ச்சி பெறவில்லை. மாறாக ஒரு சில ஆண்டுகளுக்கு முன் – நாற்பதிலும் ஐம்பதிலும் – இருந்த தமிழ் உணர்வுகூட இப்போது மங்கி வருவதைக் காண்கிறோம். ‘இருந்தமிழே உன்னால் இருந்தேன்’ என்று தமிழ்விடு தூதின் ஆசிரியர் கூறியபடி, தமிழால் தம் வாழ்வைப் பெருக்கிக் கொள்பவரைக் காண முடிகிறதேயன்றி, தமிழை வளர்த்து வாழ வைப்பவரைக் காண்பது அரிதாகின்றது. ஏன் இந்த அவலநிலை? காரணம் ஒன்றேதான். இந்த இயக்கம் மக்கள் இயக்கமாக வளரவில்லை. இங்கே மண்டபத்தில் ஆண்டுக்கு ஒரு முறையோ அன்றிச் சிலமுறையோ நாம் கூடி ஆராய்ச்சி செய்கின்றோம். இசைப் போட்டிகள் நடத்துகின்றோம். பரிசும் பட்டமும் பாராட்டும் வழங்குகிறோம். ஆனால் தமிழ் நாட்டில் மூலை முடுக்குகளிலெல்லாம் இவை பற்றி எண்ணுவார் யார்? நாலு கோடித் தமிழரில் நாலாயிரம் பேராவது இது பற்றி எண்ணுகின்றார்களா? இல்லையே! எந்தக் கொள்கையும் இயக்கமும் மக்களொடு தொடர்பு கொண்டாலன்றி வாழாது – வளராது. மக்களொடு தொடர்பே இன்றி வந்த வேற்று நாட்டுச் சமயங்களும் மொழிகளும் நாகரிகமும் அந்த வகையிலேயே நாட்டில் வளர்ந்தன என்பதைக்கண்டும் நாம் வாளாவிருத்தலாகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/64&oldid=1356323" இலிருந்து மீள்விக்கப்பட்டது