பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பண்?

63


மக்களொடு மக்களாக அவர்தம் ஊர்தோறும் நாமே சென்று – வலியச் சென்று – அங்கெலாம் பழங்காலப் பாணர்.பொருநர், கூத்தர் போன்று அவர்களொடு கலந்து பழகி, பாடி நம் இசையை வளர்க்கப் பாடுபட வேண்டும். எங்கிருந்தோ சமயம் பரப்ப வந்த மேலைநாட்டவர், தம்மை, ஐயராகவும், அடிகளாகவும், முனிவராகவும் மாற்றிக் கொண்டு மக்கள் செல்ல அஞ்சிய சிற்றூர்களுக்கும் காடு மேடுகளுக்கும் தாமே வலியச் சென்று தம் சமயக் கொள்கையைப் பரப்பி அதை வளர்க்கவில்லையா! அப்படியே தமிழ்நாடே மாற்றார் படையெடுப்பாலும் ஆட்சியினாலும் நிலைகெட்டழிந்தது என்ற நிலையில்சென்ற காலத்தில் – ஏழாம் நூற்றாண்டில் அப்பர், சம்பந்தர் போன்ற நாயன்மார்களும் முதலாழ்வார் போன்ற வைணவத் தொண்டர்களும் தோன்றி மூலைமுடுக்கு களிலெல்லாம் சென்று, மக்களைத் தழுவி, அவர்களொடு பழகி அவர்கள் வாடினால் தாமும் வாடி, அவர்கள் வாழக் காசு பெற்று, அவர்களை வாழ வைத்து, இதோ நீங்கள் ஆராய்கின்ற பண்களை ஊர் தொறும் பாடித் தமிழ்நாட்டின் தலைவிதியையே முற்றும் மாற்றவில்லையா! அக்காலத்தே வடக்கே பெருமன்னனாகிய பல்லவனும், தெற்கே பெரு மன்னனாகிய பாண்டியனும் பிற மன்னர்களும் மாறுபட்ட நிலையில் இருக்க அவர்களை ஒருசேர மாற்றி, மக்களை உய்வித்து உயர்த்தியது இப் பண்கள் அல்லவா! எனவே இன்று நாம் அவ்வாறு செய்யாமையினாலேயே வேற்று நிலைகள் வேரூன்ற நினைக்கின்றன. இன்று நாமும் அந்த ஆழ்வார்கள் நாயன்மார்கள் போன்று ஊர்தோறும் உழன்று, மக்களொடு மக்களாகப் பழகி, ஆங்காங்கே பண் ஒன்றப் பாட்டிசைத்து அவர்கள் அனைவரையும் இசை வயப்படுத்த வேண்டும். இவ்வாறு இந்த இயக்கம் மக்கள் இயக்கமாக வளர்ந்து, ஊர்தொறும் பட்டி தொட்டிக ளெல்லாம் பரவ இத்தமிழ் இசைச் சங்கம் வழிகோல வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/65&oldid=1356385" இலிருந்து மீள்விக்கப்பட்டது