பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

தமிழர் வாழ்வு



பரஞ்சோதியாரின் உத்தி

நான் மேலே பரஞ்சோதியார் வழியே விறகுத் தலையன் பாடியதாகக் காட்டிய பண்ணும் இந்த நிலையினையே நமக்கு உணர்த்துகின்றது. பாணபத்திரனை எதிர்த்த ஏமநாதனை இறைவன் மனமாற்றம் செய்திருக்கலாம்; அன்றி மருட்டியோ வேறு வகையிலோ வெளியேற்றியிருக்கலாம். ஆனால் அவ்வாறன்றித் தானே, பண்பாடும் இசைவல்லானாக வந்து பாடினான் – எப்படி? வீரகண்டியும் வெற்றி மாலையும் பட்டும் பூவும் பதக்கமும் புனைந்து வரவில்லை; சாதாரண ஏழைக் குடிமகனாகவிறகு வெட்டியாக வந்தான். ஏன்? அப் பண் உயர்ந்தார் மட்டத்தில் மட்டுமன்றித் தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலேயும் –காட்டிலே விறகு வெட்டி வாழும் ஏழை களிடத்தும் நல்ல வழக்கில் இருந்தது என்பதைக் காட்டவே பரஞ்சோதியார் இந்த உத்தியினைக் கையாண்டார். சாதாரண விறகு வெட்டியும் அக்காலத் தமிழ்ப் பண்ணை மாற்றார் மருளும் வகையில் பாடினான் என்றால் இதன் சிறப்புக்கும் பரப்புக்கும் வேறு சான்றும் வேண்டுங்கொல்! மேலும் திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருப்பாணாழ்வார் இருவருமே பண் ஒன்றப் பாட்டிசைத்தும், பாடுவர் பக்கல் நின்று யாழ் வாசித்தும் பரமனைப் பரவியுள்ளார் எனக் காட்டிய பண்டைப் பரம்பரையின் சிறப்பினை வரலாறு உணர்த்தவில்லையா!

சங்க காலத்திலும் பாணரும் பிறரும் தாழ்ந்த குலத்த வராக நாம் கருதும் கீழ்ப்படியில் இருந்தவராகக் காண் கிறோம். அவர்கள் நிலை அதுவாயின், அவர் வழியே அத் தமிழ் இசை அன்று எவ்வாறு பரவி இருந்தது என் உணர முடிகின்றதே! பரிபாடலும் பிற சங்க இலக்கியங்களும் சிலம்பும் பிறவும் விளையாட்டிலும் நீராட்டிலும் பிற செயல்களிலும் வெற்றி முழக்கங்களிலும் இப்பண் – பாடல் – இசை முக்கிய இடம் பெற்றமை அறிவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/66&oldid=1356392" இலிருந்து மீள்விக்கப்பட்டது