பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பண்?

65


இவ்வாறு ஊர்தோறும்–தெருவுதோறும், காட்டிடத்தும், நாட்டிடத்தும், செயல்தோறும், மக்கள் இசையாகஎல்லாரும் போற்றும் பாடும் – பரவும் – பாராட்டும் இசையாக இருந்ததை எண்ணிப்பார்க்க வேண்டும். பாடுவர் பாட, ஆடுவார் ஆட அனைவரும் கண்டும் கேட்டும் கலந்து பாடியும் மகிழ்ந்த தமிழ் இசை இன்று ஒரு சிலராலேயே போற்றப்பெறுகின்றது. இந்நிலை மாற வேண்டும். தமிழ் மக்கள் அனைவரும் இதை உணர்ந்து போற்றிப் பயின்று, பாடி மகிழும் நாள் வரவேண்டும்.

செயலே தேவை

அண்மையில்கூட, தேவார இன்னிசை தெருவு தோறும் ஊர்தோறும் முழங்கிற்று. நான் இளைஞனாயிருந்தபோது, இந்த நூற்றாண்டின் இருபதிலும், முப்பதிலும் கச்சி ஏகம்பன் பெருவிழாவில் நான்கு வீதி களிலும் இறைவன் பின் சுந்தர ஓதுவாமூர்த்திகளும் வேலூர் அப்பாத்துரை ஆச்சாரியார் அவர்களும் பண்ணொன்றப் பாட்டிசைக்க அவர்களைச் சுற்றி ஆயிரக் கணக்கான மக்கள் தம்மை மறந்து அப் பண்வழி ஒன்றி நின்ற நிலையினைக் கண்டவன். திருமயிலையிலும் அப்படியே. சுவாமியிடம் கூட அவ்வளவு கூட்டம் இருக்காது. இவர்களைச் சுற்றி விடிய விடியக் கூடிப் பண் ஒன்றிய பாடலைக் கேட்ட கூட்டம் இன்று இல்லை. ஏழாம் நூற்றாண்டில் தோன்றியவாறு மற்றொரு அப்பரோ, சம்பந்தரோ ஆழ்வார்களோ தோன்றினாலும், தோன்றாவிட்டாலும், நாமனைவரும் மக்களிடம் சென்று, நின்று, நிலைத்து அவருடன் ஒன்றி இந்த இசையினைப் பரப்பக் கடமைப்பட்டிருக்கிறோம். இக் கருத்தினைச் சென்ற ஆண்டிலும் செட்டி நாட்டு அரசர் அவர்களும் சீர்காழியார் அவர்களும் வற்புறுத்தினார்கள் என அறிகிறேன். எனவே, இனிச் செயல் தேவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/67&oldid=1356400" இலிருந்து மீள்விக்கப்பட்டது