பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

தமிழர் வாழ்வு



முயல்க! வெல்க!

இதோ இன்று இங்கே அண்ணாமலை மன்றத்திலே கூடி இருக்கிறோம். பத்து நாட்கள் இன்னிசை மாந்தி நான்கு நாட்கள் பண் ஆய்வு செய்து நம் கடன் முடிந்துவிட்டது என எண்ணாமல் ஒவ்வொருவரும் – சிறப்பாக இசை வாணர்களும், ஒதுவாமூர்த்திகளும் மக்களிடையே சென்று பாடி, அவர்களைப் பரவசப்படுத்தி, அவர்களோடு ஒன்றி நிற்கவேண்டும். ஆனால், இன்று அவ்வளவு எளிதன்று அச்செயல் என் நினைக்கலாம். ‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்’, என்ற குறள்வழி வாழும் நமக்கு இது எளிதே. அப்பரும், சம்பந்தரும் வாழ்ந்து தமிழ்ப் பண் பாடிநின்று காட்டிய வழியே நாம் சென்றாலன்றி, இத்தமிழ்ப் பண் வாழ வேறு வழியில்லை. ‘எப்படிப் பாடினரோ அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன்’ என்ற அளவிலன்றி அவர்களைப் போன்று ஊர்தொறும் ஓடியாடி உண்மைத் தொண்டு செய்ய வேண்டும். ஆம், முயன்றால் வெற்றி உறுதி, முயலுங்கள்! வெற்றி பெறுங்கள் என்று கூறி விடைபெறுகிறேன்.

நன்றி

மீண்டும் என்னை இப்பணியில் இணைத்த தலைவர், துணைத் தலைவர், செயலர், நிருவாகக் குழுவினர் அனைவருக்கும் வணக்கம் செலுத்தி, அனைவருடைய வாழ்த்தினையும் உடன் கொண்டு இப் பண் ஆராய்ச்சிக் கூட்டத் தொடரினை உள நிறைவோடும் இறையருளோடும் தொடங்கி வைக்கிறேன். வணக்கம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/68&oldid=1356431" இலிருந்து மீள்விக்கப்பட்டது