பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

தமிழர் வாழ்வு


தாயுமான அடிகளார் ‘கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்’ என இருமுறை கூறி உண்மையைக் காட்டி வலியுறுத்துகின்றார். அமைச்சராகி இருந்த மணி வாசகப் பெருமானும் கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும் என முறையிடுகின்றார். எனவே வள்ளுவர், காட்டிய உலகு இன்புறக் காணும் கல்வி நாட்டில் மலரும் நாள் என்றோ அன்றே நாடு நாடாகும்; நாமும் மனிதராவோம். இந்த நற்கல்வியை நாட்டுக்கு அளித்தல் அரசின் கடமையே என்பதை உணர்த்தவே கல்வி' என்னும் பகுதியை அரசியலில் அமைத்துள்ளார்.

‘அகல உழுவதிலும் ஆழ உழு’ என்ற கொள்கையை அரசாங்கங்கள் பின்பற்ற வேண்டும். அகல உழுவதும் இன்றைய ஜனநாயக உலகுக்குத் தேவைதான். ஆனால் ஆழ உழுவது அதனினும் முக்கியமானது. அப்போது தான் மனிதன் ஆறறிவு பெற்றவனாவான். இந்த கற்றனைத்து ஊறும் அறிவு என்ற அறிவினை எவ்வாறு வள்ளுவர் விளக்குகிறார் என்பதைக் காண்போம். இது தான் இக்கட்டுரையின் அடிப்படை என்றாலும் அதன் மூலமாகிய தொடர்புடைய கல்வியைப் பற்றியும் அதன் அடிப்படையைப் பற்றியும் ஓரளவாயினும் அறிதல் நன்றெனக் கருதி இதுவரை கல்வியைப் பற்றி எண்ணிணேன். இனி, அறிவு பற்றி வள்ளுவர் காட்டும் விளக்கத்தினைக் காண்போம்.

வள்ளுவர் கல்வி, கேள்வி, கல்லாமை இவற்றினை அடுத்து அரசியலில் அறிவுடைமையை வைத்திருக்கின்றார். அந்த இயலில் அறிவின் கூறுபாடுகளையும் அதன் செயல்பாட்டு முறையினையும் அதன் ஆக்க நெறியினையும் அதைப் பெற்றார் கொள்ளும் நெறியினையும் அதனால் விளையும் பயன்களையும் அதனால் உலகுக்கு உண்டாகும் நன்மையினையும் பலவகைகளில் விளக்குகிறார். உரையாசிரியர்களும் எண்ணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/74&oldid=1356773" இலிருந்து மீள்விக்கப்பட்டது