பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது அறிவு?

73


எண்ணிப் பல்வேறு வகைகளில் தெளிந்த விளக்க நிலைகளைத் தந்துள்ளனர். மேலும் பொருட்பாலின் அரசியலில் அறிவுடைமை என்ற அதிகாரம் அமைய, அதே பாலில் அங்க இயலில் புல்லறிவாண்மை என்ற அதிகாரத்தையும் இட்டு, ஆளும் அரசருக்கும் அல்லாத அங்கமாகிய உலகுக்கும் அந்த அறிவு அமையவேண்டிய வகையினையும் புல்லறிவினால் நாடு கேடுற்று நலிவதையும் சுட்டிக்காட்டுகின்றார். பின்னும் அறத்துப் பாலில் இல்லறம், துறவறம் என்ற இரண்டு இடங்களிலும் காமத்துப் பாலிலும் இந்த அறிவினைப்பற்றி வள்ளுவர் தொட்டுக்காட்டி, யாண்டும் எல்லார் வாழ்விலும் இந்த அறிவு சிறந்து இருக்கவேண்டிய இன்றியமையாமையை வற்புறுத்துகிறார். மேலும் நாற்பதுக்கும் மேற்பட்ட வகைகளில் இந்த ‘அறிவு’ என்னும் சொல்லைப் பலப்பல விடங்களில் எடுத்தாளுகிறார். அறிதல், அறிகிலார், அறிந்தார், அறியார், அறியாமை, அறிவது, அறிவன், அறிவாளன், அறிவான், அறிவினார், அறிவின்மை போன்றவை அவற்றுள் சில. எனவே உலகம் வாழத் தம் நூலை இயற்றிய வள்ளுவர் இந்த அறிவுக்கே முதலிடம் தந்துள்ளார் என்று கொள்ளல் பொருந்துவதாகும். அதனால் அதுபற்றி நாமும் எண்ணிப் பார்த்தல் அவசியமாகின்றது.

அறிவு என்பது என்ன என்பதை ஒருசில குறள்வழி வள்ளுவர் நமக்கு விளக்குகிறார். ஏதோ படித்தோ படிக்காமலோ பட்டங்கள் பெற்று, அதனால் தம்மை அறிவுடையராகக் கருதிக்கொள்வாரை நோக்கி வள்ளுவர் தம்பி, தருக்கி நிற்காதே! நீ நினைப்பதுபோல அறிவு அந்த எல்லையில் நின்றுவிடுவதன்று கற்றனைத்து அறிவு என நான் சொன்னது உண்மைதான். ஆனால் நீ கற்பவை கற்கவில்லை; ஆகவே அறிவுடையவனுமில்லை. மற்றும் அது அறிவின் அடிப்படைதான். அறிவு எல்லையற்றது; பரந்தது; அளவிட முடியாதது. அனைத்து ஆக்க நெறிகளுக்கும் அரணாவது. இதோ அறிவினைப் பற்றிக்

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/75&oldid=1356778" இலிருந்து மீள்விக்கப்பட்டது