பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

தமிழர் வாழ்வு


சில சுட்டுகிறேன். அறிந்துகொள்’ என்று கூறுவார் போன்று பின்வரும் குறட்பாக்களை வைக்கிறார்.

‘சென்ற விடத்தால் செலவிடாது தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு’ (422)


‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு’ (423)


‘எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு’ (424)


‘உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு’ (425)


‘எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு’ (426)

என்பன அவர்தம் வாய்மொழிகள்.

இவற்றிற்கு முன்னாக அறிவு, தன்னை உடையானை அழிவு வராமல் காப்பதோடு மாற்றாரால் செய்யப்படும் எந்தக் கொடுமையையும் தடுத்துக் காக்கும் என்று அறிவின் ஆக்க நெறியைச் சுட்டிப் பின்பே மேலே கண்ட ஐந்து குறள்களிலும் அறிவு என்பது என்ன என விளக்குகிறார்.

‘மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்’ என்றார் அறிவுடையார் – உலகநாதர். ஆம்! அந்த நல்ல நெறி அறிவால் வருவது தீமையைவிலக்கி நல்லதன் நலம் காண நம்மைச் செலுத்துவது அறிவு. மேலும் பலர் பல வகையாகப் பலப்பல பொருள்களைப் பற்றிக் கூட்டியும் குறைத்தும் மாற்றியும் மறைத்தும் பேசுகின்ற உலகில் அக்கூற்றுக்களை எண்ணி ஆய்ந்து மெய்ப்பொருள்களைக் காண்பதுதான் அறிவு என்கிறார். ‘பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே’ என்று அதிவீரராம பாண்டியர் அடித்துச் சொல்லுவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/76&oldid=1356812" இலிருந்து மீள்விக்கப்பட்டது