பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

தமிழர் வாழ்வு


என்னும் அதிகாரத்தில் குறிக்கிறார். ‘உலகத்தார் உண்டென்ப இல்லென்பான் வையத்துள் அலகையாய் வைக்கப்படும்’ (850) என்பது அவ்வதிகாரத்து இறுதிக் குறள். அதே அதிகாரத்திலே மேலே காட்டிய அறிவு இல்லாதவன், பிற வகையான பல செல்வங்களையும் மலை போலப் பெற்றிருந்தாலும், வறியவன் எனவும் வள்ளுவர் கூறத் தயங்கவில்லை. அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையாது உலகு (841) என்பது அவ்வதிகாரத்து முதல் குறள். எனவே முதலும் ஈறும் இவ்வாறு அமைய அந்த அதிகார முற்றிலும் அறிவில்லாதவனால் உலக வாழ்வு எவ்வாறு பேய் வாழும் காடாக மாறும் என்று சுட்டிப் பின்னர் அங்கவியலிலே புல்லறிவாண்மை இல்லையாக வேண்டி, முன்னர் அரசியலில் காட்டிய நல்லறிவு தழைக்க நாட்டில் நல்லவர் – நாடாளுபவர் முயற்சி செய்ய வேண்டுமென வற்புறுத்துவர் வள்ளுவர்.

இவ்வாறு அறிவினைப் பற்றிச் சொல்லிய வள்ளுவர் அதன் திறனையும் தன்மையினையும் அதனை உடையவர் செயல் திறமையினையும் வேறு பல இடங்களில் விளக்கிக் கொண்டே செல்லுகின்றார். அவற்றைக் காண்பதன் முன், அறிவின் எல்லையை வள்ளுவர் தம் அறிவின் திறத்தால் எவ்வாறு காட்டுகிறார் என்பதைக் காணல் நலம் பயப்பதாகும். கருத்தொருமித்த காதல் வாழ்வே எல்லா உயிர்க்கும் இயைந்த வாழ்வு அன்றோ! அந்தக் காதல் வாழ்வினைப் பின் காமத்துப்பாலில் சுட்டி விளக்கும் வள்ளுவனார் அங்கே அறிவின் அளவிலா எல்லையினைக் குறிக்கின்றார். உயிர்தவச் சிறிதே காமமோ பெரிதே' என்றபடி அமைந்த அக்காமத்தைச் சுட்டுவதற்கென, அதனினும் பெரிதாக உள்ள அறிவையே வள்ளுவர் உவமையாகக் கொள்கிறார். மேலும் முந்திய உவமை வழியே அக் காதல் வாழ்வும் மேலே நாம் கண்ட நல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/78&oldid=1356835" இலிருந்து மீள்விக்கப்பட்டது