பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

தமிழர் வாழ்வு


என்றும் தெரிந்து வினையாடல் என்ற அதிகாரத்துள் தெரிந்து தெளிந்து செயலாற்றத் தகுதியுடையார் இந்த அறிவினையும் அதனோடு சார்ந்த அன்பு, தேற்றம் போன்றவையும் உடையவரே எனக் காட்டுவர். மேல் 513ஆவது குறளில் நான்கின் இன்றியாமையினைச் சுட்டிய ஆசிரியர், அந்நான்கனுள் சிறந்தது. உயர்ந்தது என்பதைக் குறிக்கவே 515இல் அறிவினை மட்டும் அறுதியிட்டுக்காட்டுகிறார். இதை அரசியலிலே அமைத்து, நாடு நாடாக வேண்டுமானால் நல்ல அரசு தேவை என்பதையும் அந்த நல்ல அரசுக்கு அறிவுடமை வேண்டும் என்பதையும் முன்னே முறையாகச் சுட்டி, அரசின் செயற்பாடுகளுக்கு இந்த அறிவே அடிப்படை என இந்த அதிகாரத்திலும் சுட்டுகிறார். அப்படியே பின் அங்க இயலிலும் ‘தூது’ என்னும் அதிகாரத்தில்,

அறிவு உரு ஆராய்ந்த கல்வி இம்மூன்றும்
செறிவுடையான் செல்க வினைக்கு (684)

எனக் காட்டுவர். எனவே எத்தகைய செயலாயினும் அறிவு இன்றேல் பயனில்லை என்பதை உணர்தல் வேண்டும். இதை வள்ளுவர் இன்னும் பல விடங்களில் சுட்டுவர். விரிப்பிற் பெருகும்.

இனி, இந்த அறிவு உலக வாழ்விற்கு இன்றியமையாத ஒன்று என்பதையும் அது அறத்தொடு சார்ந்த ஒன்று என்பதையும் அறத்துப்பாலில் துறவறத்தும் இல்லறத்தும் வள்ளுவர் தெள்ளத்தெளியக் காட்டுவதோடு, அறிவுடைமை அறத்திற்கே பயன்படவேண்டும் என்பதையும் அதுவே பல்வேறாகப் பாரித்துப் பரந்து கிடக்கும் அறிவு நெறிகளில் சிறந்தது என்பதையும் திட்டமாகப் புலப் படுத்துகின்றார் என்ற ஒன்றினை மட்டும் கண்டு அமைவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/82&oldid=1356863" இலிருந்து மீள்விக்கப்பட்டது