பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது அறிவு?

83


அமையவேண்டும் என்பதும், அக்கல்வி அறிவு முதற்படியே என்பதும், அந்த அறிவின் நிலை வளர வளரப் பல்வகையாகப் பல்கிப் பெருகி எல்லையற்ற இறையருளைப் போன்று எல்லைக்கு அப்பாற்பட்டு விரியும் ஒன்று என்பதும், அதன் திறனையும் வகையையும் செயலையும் பயனையும் அறிவார் மிகச் சிலரே என்பதும், அப்படி அறியவல்லவரே, ‘அறிவுடையார்’ என்பதும், அவர்கள் அறிய அறிய இன்னும் அறியாப் பெருநிலையினை எண்ணி வியப்பர் என்பதும், அந்த அறிவுடையார் எல்லா உயிர்களையும் ஒத்து நோக்கிப் பிறர் துயர் தம் துயராக நினைத்து உண்மை உணர்ந்து, நல்லதையும் அல்லாததையும் பகுத்துணர்ந்து, நாடு வாழ நல்லதையே செய்து மாற்றாரையும் மதித்து அவர்க்கும் நலம் செய்து என்றும் எங்கும் இன்பம் நிலவ வழி காண்பவர் என்பதும் நன்கு புலனாகும்! அத்தகைய நல்லவர் நாட்டிலும் உலகிலும் அருகிய காரணத்தாலேயே யாண்டும் அல்லலும் அவதியும் மிக்குள்ளதென்பதைக் காண்கின்றோம்.

எனவே நாடும் நானிலமும் வாழ வேண்டுமாகையால். அத்தகைய நல்லறிவாளர் நாட்டில் வாழ – வளர – வழிகாட்ட வகை செய்ய வேண்டும். அத்தகைய நல்ல. பண்பாளர் – அறிவாளர் – திருவாளர் கி. பழநியப்பர் அவர்தம் பவளவிழா நடைபெறுவதறிந்து மகிழ்கின்றேன். அவரைப் போன்ற பல நல்லறிவாளர் நாட்டில் தழைத்து நாட்டையும் நானிலத்தையும் வாழவைக்க முற்படுவாராக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/85&oldid=1357197" இலிருந்து மீள்விக்கப்பட்டது