பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது உரைநடை ?

91


பற்றி ஆசிரியர் விளக்கி உரைப்பதே வருணனை உரையாகும். எவ்வாறு செயல்கள் நிகழ்கின்றன என்ற அறிவியல் ஆய்வுகளைக் கூறுவதும், திறனாய்வு முறைகளைக் காட்டுவதும் பொருளில் உள்ள சிறப்பியல்புகளை விளக்கிக் காட்டுவதும் விளக்க உரையாகும். துன்ப எல்லையிலோ, இன்பத்தின் பிடிப்பிலோ, மகிழ்ச்சிப் பெருக்கிலோ தம்மை மறந்தும் மீறியும் உரைப்பதே உணர்ச்சியுரை.

தமிழ் உரைநடை வளர்ந்தாலும் அதன் வரலாற்றைத் தொடர்ச்சியாக அறிய முடியவில்லை என்பதை எண்ணும் போது சற்றே வருத்தம் உண்டாகத்தான் செய்கிறது. எழுதப் பெற்ற, வரையறுத்த திட்டமான வரலாறு இல்லையாயினும் தமிழில் உரைநடை மிகப் பழங்காலத் தொட்டே தொடர்ந்து வாழ்ந்து வருகின்ற ஒன்று என்பதைக் காட்ட ஆதாரங்கள் உள்ளன. தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்பும் இருந்த உரைநடையை நம்மால் காண முடியாவிட்டாலும், அந் நூற்பாவாலும் அதன் உரைகளாலும், அவ்வுரையின் விளக்கங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறிய, இன்றில்லாது அழிந்த சில நூற்பெயர்களாலும் (இராம சரிதமும், பாண்டவ சரிதமும், பெருந்தேவனார் பாரதமும், தகடுர் யாத்திரையும் போன்றன என்று தொல்காப்பிய உரையாசிரியர்களால் காட்டப் பெறுவன) உரை தொன்மை வாய்ந்ததே என உணர முடிகின்றது. மேலும் சங்க இலக்கியங்களுள் சில உரைநடையைப் போன்றே தனிச்சொல் பெற்றும் பெறாமலும் அமைந்து செல்வதையும் காண முடிகின்றது. கடைச்சங்க காலத்து இறுதி எல்லையில் தோன்றிய சிலப்பதிகாரத்திலேயே நம்மால் உரைநடையைத் தெளிவாகக் காண் முடிகிறது. இதனாலேயே தொல்காப்பியச் சூத்திரத்துக்கு (செய்.228) உரை காண வந்த நச்சினார்கினியர் அதற்குச் சிலப்பதிகாரத்தையே மேற்கோளாகக் காட்டியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/93&oldid=1358329" இலிருந்து மீள்விக்கப்பட்டது