பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

தமிழர் வாழ்வு


அதே போலக் கடிகாரத்தைப் பற்றிக் கடிகாரக் காட்சியிலே, நாழிகை வட்டில் எவ்வாறு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதைப் பற்றித் தனியாக நிறுவிக் காட்டிள்ளார்கள். அதில் நம் நாட்டு நாழிகை வட்டில் பற்றிய குறிப்பும் இணைந்துள்ளமை அறிந்தேன்.

பின் பாரிசில் நான்கு நாட்கள் தங்கியிருந்தேன், அங்கு ஈஸ்டர் விடுமுறை, ஆதலால் நான் எதிர்பார்த்த தமிழன்பர்கள் யாரும் வரவில்லை. பெரிய நூல் நிலைய மான பிரெஞ்சு நூல் நிலையத்திற்குச் சென்றேன். புதுச்சேரி விடுதலை அடைந்தபோது, அங்கிருந்து நிறையத் தமிழ் நூல்களைப் பாரிஸ் எடுத்துச் சென்று வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அங்கே கொடுத்த நூற்பட்டியலில் தமிழ் நூல்கள் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. இரண்டு அகராதிகளைத் தவிர வேறு ஒரு நூலும் காணப்படவில்லை. மற்றவை எங்கே என்று கேட்டால் அவர்களுக்குச் சொல்ல வழி தெரியவில்லை. .

பாரில் நகரில், நம் நாட்டுக் கோயில்கள் இருக்கின்றன. அங்கு நம் நாட்டு மரபுப்படி விழாக்கள் சிறப்பாக நடை பெற்று வருகின்றன. பாதாள இரயில்கள் இல்லை யென்றால் பாரிஸ், இலண்டன், நியூயார்க்கு போன்ற நகரங்கள் மிகவும் நிலைகெட்டுவிடும் என்றே கூறலாம். அவை இரண்டு நிமிடத்திற்கொரு முறை தங்கு தடையின்றி ஒடிக்கொண்டே இருக்கின்றன. ஒருநாள் பாதாள இரயிலில் நான் போய்க் கொண்டிருக்கும்போது, அன்பர் ஒருவர் ‘நீங்கள் தமிழரா?’ என்று தமிழிலே கேட்டார். வியப்புடன் திரும்பினேன். அவர் யாழ்ப் பாணத்தைச் சேர்ந்தவர். சுதா என்னும் பெயரையுடைய அவர் எனக்கு இரண்டு நாட்கள் மிகவும் உதவியாக இருந்தார். அவர் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார். மிகச் சிறிய அறை, அதற்கு நம் நாட்டு மதிப்பு ரூ. 3,000/- வாடகை. அந்த அறையில் யாழ்ப்பாணத் தமிழர் ஐவர் தங்கியிருந்தனர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/98&oldid=1358348" இலிருந்து மீள்விக்கப்பட்டது