பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இனிமைச் சிறப்பு

"தமிழ் என்பதற்கு 'இனிமை' என்றும் ஒரு பொருளுண்டு. இதனை 'இனிமையும் அழகும் தமிழ் எனல் ஆகும்" என்பதனால் நன்கறியலாம். மேலே காட்டிய தீந்தமிழ், தேந்தமிழ் போன்ற அடைமொழிச் சொற்களும் இதனை மெய்ப்பிக்கும்.

'பசி இல்லாவிடில் இந்தப் பாலையாவது குடியுங்கள் என்ற தன் மனைவியை நோக்கிப் புலவர் ஒட்டக் கூத்தர் கூறியது இது:

'போடி பைத்தியக்காரி! இன்று அரசவையில் புகழேந்தி அரங்கேற்றிய நளவெண்பாவில் இரண்டொன்றைப் பிழிந்து கொடுத்தாலாவது அதன் சுவைக்காக உண்ணலாம். உன் பாலில் என்னடி சுவையாயிருக்கப் போகிறது?"

என்னே தமிழின் சுவை!

"அறம் வைத்துப் பாடியுள்ள இக்கலம்பகத்தைக் கேளாதீர்கள். கேட்டால் தங்களின் உயிரே போய்விடும்" எனப் பாடிய புலவனே கூறித் தடுத்தபோதும், அதனைக் கேட்க விரும்பிய நந்திவர்ம மன்னன் கூறியது என்ன தெரியுமா?

'தமிழைச் சுவைப்பதன் மூலம் சாவே வரினும் அதனை மகிழ்வோடு வரவேற்பன்' என்பதே.

என்னே தமிழின் இனிமை!