பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

தமிழின் சிறப்பையே தம் வாழ்வின் சிறப்பாகக் கருதி, அல்லும் பகலும் அயராது உழைத்து வருபவர் முத்தமிழ்க் காவலர் கி. ஆ.பெ. விசுவநாதம் அவர்கள். தமிழ்நாட்டின் தமிழர்களின் உயர்வுக்கான அரும்பணிகளே இவர்தம் குறிக்கோள். இவருடைய பேச்சும் மூச்சும், சொல்லும் செயலும், எண்ணமும் எழுத்தும் எல்லாமே தமிழே. எப்பொழுதுமே இவர்தம் உள்ளத்தில் மேலோங்கி நிற்பது தமிழ் நலமும், தமிழர் நலமுமே.

இன்று இவர் தமிழின் சிறப்புகளைப் பல்வேறு வகைகளில் தக்க சான்றுகளை எடுத்துக்காட்டிச் சிறந்த முறையில் எல்லாருளமும் மகிழத்தமிழுலகிற்கு வழங்கின்றார். எளிய இனிய தமிழில், இளைஞர் தொடங்கி முதியர் ஈறாக ஆண் பெண் அடங்கலும் கற்று வியக்கும் வண்ணம் தமிழின் சிறப்புகளைத் தக்க ஏதுக்களும் எடுத்துக்காட்டுகளும் தந்து விளக்கிச் செல்கின்றார். முத் தமிழின் வித்தகங்களையும் இலக்கிய இலக்கணங்களின் அருமை பெருமைகளையும் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் கண்டு தெளிந்து ஆசிரியர் அமைத்துத்தரும் செய்திகள் கற்பார்க்குக் கழிபேருவகை தருவன. இத் தமிழ்ப் பெருமகனாரின் கல்வி கேள்வி நுண்ணறிவுகளைத் தமிழுலகிற்குப் பறைசாற்றுகிறது இத் தமிழின் சிறப்பு. இந் நூலகத்தேயுள்ள பதினாறு பிரிவுகளும் தமிழ்ப் பெருமக்களுக்குக் கிடைத்த பதினாறு பெரும் பேறுகள்

வரலாற்றுப் புகழ்மணங் கமழும் தமிழின் சிறப்புப் பற்றிய இந் நூலையும் எமது நிலைய வாயிலாக வெளிவர வாய்ப்பளித்த திருவாளர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களுக்கு எமது நன்றி உரியதாகுக. 'தமிழின் சிறப்பு கண்டு தமிழுலகம் மேன்மேலும் புதிய சிறப்புக்களையும் பேறுகளையும் பெற்று ஓங்கி வளர்வதாக.

சென்னை -1. . பாரி நிலையத்தார்