பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதிப்புரை

பன்மொழிப் புலவர்

கா. அப்பாதுரை எம்.ஏ. (ஆங்கிலம்), எம்.ஏ. (தமிழ்), விசாரத் (இந்தி), எல்.டி.

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர், சோழன் கரிகாலன் பதினாறுகால் மண்டபம் ஒன்று எழுப்பி, அதில் அரங்கேற்றப் பட்ட பட்டினப்பாலையைப் பாடிய தமிழ்ப் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனாருக்குக் கால் தோறும் ஒரு நூறாயிரம் பொன் கிழி கட்டிவைத்து அப்பதினாறு நூறாயிரம் பொன்னையும் பரிசாக அளித்தான் என்று கலிங்கத்துப் பரணி கூறுகிறது.

இதனை நினைவூட்டும் வகையில், நம் தமிழக அரசு பரிசுத் திட்டம் என்ற பதினாறுகால் மண்டபம் நிறுவி, மாதம்தோறும் பதினாறு பேர்களுக்கு நூறாயிரம் நூறாயிரம் வெள்ளியாகப் பரிசளிப்பதை நாம் அறிவோம். -

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் தமிழின் சிறப்பு என்ற இவ்வேட்டைத் தமிழன்னை கோயில் கொள்வதற் குரிய ஒரு பதினாறுகால் மண்டபமாகப் பதிப்பித்து, அதன் கால்கள்தோறும் இலக்கம் வெள்ளி பொன் மணிக்கருத்துக்களாக வரிந்துகட்டிப் பதினாறு சிறப்புகளைக் கூறித் தமிழில் பணி செய்பவர் கட்கெல்லாம் ஒரு பதினாறு நூறாயிரம் பொற்கிழி பரிசாக அளித்துள்ளார்.

தமிழின் சிறப்புகளைப்பற்றி எழுதியவர் ஏராளம். ஆனால் பதினாறு செல்வத்துடன் ஒப்பாகப் பதினாறு சிறப்புகள் என்ற வகுப்பு முறை புதிது. இதுமட்டுமன்று ஒவ்வொன்றும் ஓரிலக்கம் அதாவது ஒரு நூறாயிரம் அடங்கிய பொற்கிழியின் மதிப்பு டையது. தமிழ்பற்றி வேறு எங்கும் கூறாத கருத்துகளும், கூறிய கருத்துகளிலும் எவரும் கருதாத சந்த முறை களும் அவற்றில் பக்கம்தோறும் பத்திதோறும் மிளிர்கின்றன.