பக்கம்:தமிழின எழுச்சி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 105

ஆட்சிக்கு வந்துள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் நம் வரவேற்புக் குரியவர்களே!

இனி, வரவேற்புக்குரியவர்கள் பாராட்டுக்குரியவர்களாக இருக்கின்றார்களா என்பது, அவர்கள் நடந்துகொள்ளப்போகும் முறைகளிலிருந்து தெரிந்து கொள்ளவேண்டிய தொன்றாகும். புதியதாக வரும் எதுவும் தொடக்கத்தில் கொஞ்சம் மனச்சலிப்புடன்தான் ஏற்றுக் கொள்ளப் பெறும். ஏனெனில் பழைய நிலை மேலிருந்த ஒருவகைத் தெளிவும் அதன்வழி ஏற்பட்ட நம்பிக்கையும் ஒரு புறம்; புதிய நிலை பற்றிய அறியாமையும் அதன்வழி ஏற்படும் அச்சமும் அருவருப்பும் ஒரு புறம்! எனவே ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்களை நாம் பாராட்டுவது என்பது, அவர்கள் எந்தெந்தத் திசையில் அடியெடுத்து வைக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தது. ஆனால், அவர்களை நாம் வரவேற்று வாழ்த்துரைப்பது என்பதோ, நம் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை குறிப்பாக, நம் தமிழினத்தைப் பொறுத்தவரை, இன்னும் குறிப்பாக, நம் திராவிட இனத்தைப் பொறுத்தவரை நாம் மிகவும் மகிழவேண்டிய ஒரு செய்தியேயாகும்.

தென்புலத்தைப் பொறுத்தவரை, வடபுலத்து மக்களால் (அல்லது தலைவர்களால்தாம் ஆகட்டும்!) என்றும் சரிநிகர் சமமாக நன்மை அல்லது நயன்மை கிடைத்து விடும் என்பது வெறும் பகற்கனவுதான்! அரசியல் வழியாகக் கட்டாயம் நன்மைகிடைக்கும் என்று அங்கிருந்து வரும் தேசியத் தலைவர்களும் அவர்களுக்குக் கட்டியங்காரர்களாக இருந்து, தெற்கு வாயிலைத் திறந்து விட்டுக் கொண்டிருக்கும் கட்சிக் கண்காணிகளும் தொடர்ந்து கூறி வருவது ஒருவகையில் உண்மையாகவே இருக்கலாம்! ஆனால் ஒரு நாடு, அல்லது ஒரு தேசிய இனம் என்பது வெறும் அரசியல் ஊதியத்தை மட்டும் கணக்குப் போட்டுப் பார்க்கும் நிலையிலேயே இருக்குமானால் அதன் அடிப்படை உரிமைகளை, இன்னும் தெளிவாகச் சொன்னால் வரலாற்று வழியாக அதுபெற்ற அல்லது பெறவேண்டிய ஊதியங்களைப் படிப்படியாக, இழக்க வேண்டியதாகவே இருக்கும். எனவே, அரசியல்வழி வரும் ஊதியத்தை விட வரலாற்று வழியாக நாம் பெறும் இழப்பு எத்தனை மடங்கு என்று கணக்குப்போட்டுப் பார்ப்பதே தேசிய இனங்களின் இயற்கை மேம்பாட்டுக்குரிய சரியான வழியாகவும், இப்படி நாம் போட்டுப் பார்க்கின்ற கணக்கியல்படி, நமக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தாலும் சரிதான்; 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' ஆட்சிக்கு வந்தாலும் சரிதான்; இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் அண்மையில் புதிதாய் முளைத்ததும்,