பக்கம்:தமிழின எழுச்சி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

106 • தமிழின எழுச்சி

முளையிலேயே கருகிக் கொண்டிருப்பதுமான 'மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்' இனிமேல் முளைத்துக் கிளைத்து ஆட்சியைக் கைப்பற்றுமானாலும் சரிதான்! எவ்வாறேனும், எவ்வகையிலேனும், எவராலேனும் இங்குள்ள திராவிட மரபு கட்டிக் காக்கப் பெறவேண்டும் என்பதே நம் முழுமையான அரசியல் கொள்கை! ஏனெனில் கட்சி வரம்புகளை மீறியது இன வரம்பு! எனவே, நமக்கு இன நலந்தான் அரசியல் நலம்; பொருளியல் நலம்: குமுகாயவியல்நலம்! தொன்மைச் சிறப்புடைய ஓர் இனம், பிறிதோர் இனத்தால் குற்றுயிரும் குலையுயிருமாகச் சிதைக்கப்பட்டுச் சீரழிகின்ற வரலாற்றுச் சிறுமையையும் அதன் பேரிழப்பையும் விட, அவ்வழியினின்று தோன்றும் அரசியல் பெருமையும் அதன் பேரூதியமும் உயர்ந்தனவோ, ஊக்கந்தருவனவோ அல்ல. எனவேதான் வடபுலத்துக்கட்சிக்குத் தலையைப் பிடிப்பதினும், இங்குள்ள ஒரு தென்புலத்துக்கட்சிக்கு வாலைப்பிடிப்பது நமக்கு நலந்தருவதாக இருக்குமென்று நம்புகின்றோம். தி.மு.க. வந்திருந்தால் நல்லதுதான்; ஆனால் அ.இ.அ.தி.மு.க. வந்தால் கேடில்லை என்றும், அதுவும் ஒருவகையில் நலஞ்செய்வதே என்று கணிக்கின்றோம்.

ஆனால், இங்குள்ள தமிழ் மக்களோ, தங்கள் இன நலத்தைக் காத்துக்கொள்வதைவிட, தந்தம் கட்சி நலத்தைக் காப்பதிலேயே கண்ணும் கருத்துமுள்ளவர்களாக இருப்பது, அவர்களுக்கு வரலாற்றறிவு போதாது என்பதையே காட்டுகின்றது. அதற்காக நாம் மிகவும் இரக்கப் படுகின்றோம்! எனினும் எப்படியோ, அவர்களையறியாமல் அவர்களின் குருதி நாளங்களில் ஓடிக்கெண்டிருக்கும் 'திராவிட இன மரபு, இத்தேர்தலில் கட்டி காக்கப் பெற்றிருக்கின்றது. அதைப் பொறுத்த அளவில் நாம் அவர்களுக்காக நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கின்றோம். எனவேதான் ஆட்சிக்கு வந்துள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரை 'வருக வருக' என வரவேற்பதில் நாம் பெரிதும் அக்கறையுடையவர்களாக இருக்கின்றோம்.

இனி, ஆட்சிக்கு வந்துள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர், தமக்கு மக்களால் கொடுக்கப்படுகின்ற பெரும் பொறுப்பினை, இயற்கையாகத் தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற ஒரு நல வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, இங்குள்ள மக்களுக்கும் அவர்களின் வரலாற்றுச் சிறப்புடைய இனத்திற்கும், மொழிக்கும் தம் ஆட்சிக்காலத்தில், எவ்வெவ் வகையில் நல்லது செய்ய முடியுமோ, அவ்வவ் வகையில் தவறாமல் செய்து விட வேண்டும் என்பதில் ஆர்வமும் அக்கறைமுடையவர்களாக இருத்தல் வேண்டும். ஏதோ தம் அரசியல் ஊதியத்திற்காகத் தம் பதவிகளைப் பயன்படுத்திக்