பக்கம்:தமிழின எழுச்சி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

126 • தமிழின எழுச்சி

இருக்கின்றன. இவற்றால் இக்கட்சியினர் தொகுக்கும் ஆயிரக்கணக்கான உருபாக்கள், என்னென்ன உருப்படியற்ற வழிகளில் செலவிடப் பெறுகின்றன என்பதை நினைக்கையில் தமிழனின் இரண்டகத்தன்மை நன்கு விளங்குகிறது. பார்ப்பனீயச் சீரழிவை ஒழிக்கப் புறப்பட்ட இவர்கள், அதனினும் கேடான வழிகளிலன்றோ மக்களை இட்டுச் செல்கின்றனர்! கடவுள் இல்லை என்பது மட்டுந்தானா பகுத்தறிவு? மாந்தனுக்குத் தேவையான பிற பகுத்தறிவு உணர்வுகளுக்காக இவர்கள் என்ன செய்கிறார்கள்? இனி, இவர்களிலுந்தாம் எத்தனைப் போலி உணர்வுகள்! கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு, வீடுகளில் மறைமுகமாகத் திருவிழாப் பூசனைகள் செய்பவர்கள் இவர்களில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். நாடக மேடைகளிலும் திரைப் படங்களிலும் பகுத்தறிவு பேசிக் கடவுளைப் பழித்த, பெரியார் தொண்டராகிய ஒரு நடிகர், தம் வீட்டுப் படுக்கையறையில் புட்டபர்த்தி சாயிபாபா படத்தை வைத்து வணங்குவதும், தமிழக அரசியல் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் தம் படுக்கையறையில் அன்பொழுக, திருப்பதி வெங்கடாசலபதி படத்திற்கு நாள்தோறும் பூசை செய்வதும், பொதுமக்களுக்கு இவர்கள் செய்யும் இரண்டகம் ஆகாதா? ஏமாற்று ஆகாதா? எத்தகைய கொடிய இரட்டைப் புனைவுகள்!

பார்ப்பனனின் வேத, புராண, இதிகாசக் கீழ்மைகளைவிட இன்னும் கேடு கெட்ட கீழ்த்தரமான, விலங்குத்தனமான இழிவுகளையும், அருவருப்புகளையும் இன்று வெளிவரும் திரைப்படங்களும், கழிசடைக் காம இதழ்களும் பரப்பவில்லையா? இவற்றை வெளிக்கொணர்பவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் தாமே! ஒருபுறத்தில் இன முன்னேற்றம், மொழி முன்னேற்றம், நாட்டு முன்னேற்றம் என்று பேசிக்கொண்டு, மறுபுறத்தில் கீழ்மைகளையும், இழிவுகளையும் நம் மக்களிடையிலேயே விற்றுக் காசாக்குவதா? இஃது எத்துணை கயமை? தங்களைப் பின்பற்றும் பொதுமக்கள் இவற்றை விளங்கிக் கொள்ள மாட்டார்கள் என்பதற்காக அவர்கள் பணத்தை மறைமுகமாகக் கொள்ளையடிப்பதுடன், அவர்கள் அறிவையும், மனங்களையும், வாழ்வியல் நோக்கங்களையும் கீழ்மைப் படுத்துவதா? எவ்வளவு மனக்கேடான கொடுமைகள்! தாழ்வை அகற்றக் கயமையை விளைவிப்பதா? எத்துணை வெட்கங்கெட்ட விளைச்சல்!

நம் தமிழக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் அமைச்சர்களில் முதல்வரும் மற்றும் ஓர் இருவரும் நடிகர்கள் என்பதால், திரைப்படக் கொள்ளைகளுக்கு இத்துணை ஆதரவா? எங்குப் பார்த்தாலும் திரைப்பட ஆட்சி! திரைப்படமே கொடி கட்டிப்-