பக்கம்:தமிழின எழுச்சி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 
வீரமணி தாக்கப்பட்டது குறித்துப்
பெருஞ்சித்திரனார் அறிக்கை


திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில், வெறியர்கள் சிலரால் தாக்கப்பட்ட செய்தி மிகவும் அதிர்ச்சி தந்தது. தாக்கியவர்கள் அ.தி.மு.க. வினர் என்று அறிந்தவுடன் அவ்வதிர்ச்சி இரட்டிப்பானது. தன்னைத் தானே அழித்துக் கொள்வதில் தமிழினத்தைப் போல், ஓர் இழிந்த இனத்தை இவ்வுலகில் வேறு எங்கும் காணவே முடியாது. உண்மையான தமிழ்த்தொண்டு செய்துவரும் ஒப்பற்ற தொண்டரும் தலைவரும் ஆகிய வீரமணி அவர்களைத் தமிழன் ஒருவன் தாக்குகிறான் என்றால், அவன் கட்டாயம் தமிழனாகவே இருக்க முடியாது. அவ்வாறின்றி அவன் தமிழனாக இருந்தால், அவன் உறுதியாகத் தமிழனுக்குப் பிறந்தவனாக இருக்கவே முடியாது.

தந்தை பெரியாருக்குப்பின், தமிழர்களின் திராவிட இனத்தின் நலத்துக்காகவே தம் முழு வாழ்க்கையையும் ஈடுபடுத்திக் கொண்டு முழுநேரமும் நம் இனத்தின் முன்னேற்றத்திற்காகவே அலுப்பும் சலிப்புமின்றி, அயராமல் அரும்பாடுபட்டுவரும் மதிப்பிற்குரிய தமிழினத் தளபதி வீரமணி அவர்களின் உயிர் பெரிதும் மதிக்கத் தகுந்ததும் விலைமதிப்பற்றதும் ஆகும். அவர் தொண்டு இக்காலத் தமிழினத்திற்குக் கட்டாயத் தேவையான ஒன்று. இந்நிலைகளைத் தெளிவாக அறியாத மூடர்களே அவர் தொண்டை மதியாமல் அவர்க்குத் தீங்கிழைக்க முன்வருவார்கள்.