பக்கம்:தமிழின எழுச்சி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 139


அரசியல் களத்தில் எத்தனையோ அருவருப்புகளும் இழிவுகளும் அழிவுகளும் நேர்வதுண்டு. ஆனால் தமிழ்நாட்டு அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுவரும் அரசியல் குழப்பங்களும் குழிபறிப்புகளும் இழிவுகளும், அழிவுகளும் வேறு எக்காலத்திலும் வேறெங்கும் நடந்ததில்லை.

பகைவர்களும் செய்யத் துணியாத இக்கொடுஞ்செயலைத் தமிழர்களே செய்தார்கள் என்று நினைக்கையில் தமிழினம் இன்னும் தன்னுணர்வும் தன்னறிவும் பெறவில்லையே என்பதை உணர்த்திப் பெருவருத்தம் உண்டாக்குகிறது.

அரசியல் நிலையில் எத்தனையோ கருத்து மோதல்கள், கொள்கைப் போர்கள் நடைபெறலாம். ஆனால் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் இலக்குகளுக்காகப் பாடுபடும் மனப்பக்குவம் அரசியல் பண்பாடும் வளர்தல் வேண்டும். ஒருவரையொருவர் கீழ்த்தரமாகப் பேசிக் கொள்வதும் இழிவு உரைகளால் பழித்துரைப்பதும் கொள்கை வலிவற்றவர்களின் செயல்களே ஆகும். அந்நிலை மிகமிக இழிவானது மாகும். தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில், இவ்விழிவான தன்மைகள் நாளுக்குநாள் மிகவும் கொடுமையான நிலைக்குப் போய்க் கொண்டிருப்பதும் மிகமிக வெறுக்கத்தக்கதும் கண்டிக்கத் தக்கதும் ஆகும்.

எப்படியோ இத்தகைய சில கொடுமைகளுக்கும், கிளர்ச்சிகளுக்கும் நடுவில், உண்மையான ஒரு நல்விளைவு உருவாகும் காலம் மிக அண்மையில் உள்ளது என்பதையே இவ் வன்முறைப் போக்குகள் தெரிவிக்கின்றன. ஆரவார அரசியல் கட்சிக்காரர்களின் இத்தகைய புன்செயல்களால் இதுவரை மிகவும் பொறுமையாக இருந்துவரும் பொதுமக்களும் நாட்டுநலம் கருதும் கொள்கை உணர்வுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களும் உண்மையான, மறுமலர்ச்சிப் போருக்குக் கிளர்ந்தெழவே செய்வர். அந்நிலை மிகவிரைவில் ஏற்படும் என்பதையே இவ் விழிவான தாக்குதல்கள் உணர்த்துகின்றன.

வீரமணி ஒரு தனி மாந்தரல்லர். ஓர் இன எழுச்சியின் மொத்த வடிவம், எதிர்காலத் தமிழின மறுமலர்ச்சிக்கான முயற்சிகளின் முனைப்பு. அவர் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் செயல்கள் நடைபெறத் தொடங்குவது தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சிக்கு வித்திடப் பெறுகிறது என்பதையே காட்டும்.

தமிழகத்தை ஆள்கின்ற கட்சித் தலைவர்கள் இவ்வகையில் முன்னறிவுடன் நடந்து கொள்வார்கள் என்றே நம்புகின்றோம்.