பக்கம்:தமிழின எழுச்சி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 167

களையும் தமக்கும் அதுபோலும் விளைவுகளையுமே தோற்றுவிக்கும் என்பதை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுதல் வேண்டும்.

தொண்டுணர்வே தலைமையுணர்வு ஆகிவிடாது. அல்லது ஆசையாலோ, பொருள் வலிவாலோ, பிற சாய்கால்களாலோ மட்டும் தலைமையை எய்திவிட முடியாது. மேற்கூறிய தொண்டுச் சிறப்பியல்களில் பெரும்பான்மைத் தன்மைகளையும் கொண்ட ஒருவரே தாம் தலைமை பெற எண்ணுதல் வேண்டும். எண்ணிய பின்னர் எஞ்சியுள்ள சிறப்பியல்களையும் படிப்படியாகத் தம்முள் வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும். அதன் பின்னரே தலைமைக்குத் தம்மை முன்வைத்துக் கொள்ளுதல் வேண்டும். எடுத்த எடுப்பிலேயே தம்மைத் தலைவராக அறிவித்துக் கொள்ளுதலும், இயக்கம் தொடங்கிவிடுதலும் ஏதோ ஒரு காலக் கட்டத்தில், அல்லது ஒரு சூழலில் தமக்குப் பொருந்தி வரும் செயல்களாகவே இருப்பினும், அல்லது தம்மை அவ்வாறு அறிவித்துக் கொள்ள வேண்டித் தம்மிடத்தில் வந்து ஏதோ ஒரு காரணத்தில் இணைந்துள்ள அன்பர்கள் அல்லது நண்பர்கள் அல்லது தொண்டர்கள் எனப் பெறுவோர் தூண்டுதலாலும், அத்தலைமைப் பொறுப்பாளராகத் தம்மை ஆக்கிக்கொண்டால், பின்னர் அந்நிலை அவர்களுக்கு மிகக் கேடாகவும், இழுக்காகவும், துன்பமாகவுமே முடியும். அந்நிலை தம் தொண்டுணர்வையே மழுங்கடித்துச் சோர்வு கொள்ளும்படி செய்துவிடும்.

பணமோ, அறிவோ, அன்போ, ஏதோ சில செயல்கள் அல்லது திறன்கள் மட்டுமோ தலைமைக்குத் தகுதிப்பாடுகள் ஆகிவிடா.

‘பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள'

'அறிவென்னாம் யார் மாட்டும், வெஃகிவெறிய செயின்'

'அரம் போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட் பண் பில்லா தவர்'.

- போலும் திருவள்ளுவர் கூற்றுகள், பொருளோ, அறிவோ மட்டும் ஒருவர்க்குப் பிற தகுதிகளை உண்டாக்கி விடுவதில்லை என்னும் கருத்துகளை வலியுறுத்தும்.

எனவே, முகிழ்த்த தொண்டுணர்வு முதிர்ந்து பழுத்த பின்பே தலைமையுணர்வு தோன்றும். அதுவே பின்னர் அவரைத் தலைமைக்குத் தகுதிப்படுத்தும். மற்றபடி, நால்வர் சேர்ந்து, அவர் பணத்துக்காகவோ, அறிவுக்காகவோ, வேறு ஒரு சில பொதுவுணர்வுகளுக்காகவோ, விளம்பர ஆரவார உக்திகளைக் கையாண்டு ஒருவரைத் -