பக்கம்:தமிழின எழுச்சி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 191

இன்னும் சொன்னால் ஒரு தெய்வத் தன்மை இருப்பது போலவும் கற்பனையாகவும், மதவுணர்வோடும் சில போலித்தனமான கற்பிதங்களைச் செய்து கொண்டு, அதை ஒரு மத நூலாகவே கருதி, அதன் வாழ்வியல் கோட்பாடுகளை ஒரு சமயமாகவே செய்து வருகின்ற அடாத போக்கு, தமிழர்களை மேலும் அடிமை உணர்வுக்குள்ளும் அறியாமைச் சேற்றுக்குள்ளுமே ஆழ மூழ்க்குமேயன்றி, ஓர் உரிமை பெற்ற உண்மை அறிவு பெற்ற ஒரு சமயவுணர்வுச் சமநிலைக் குமுகாயமாக மீட்டெடுக்க உதவாது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.

திருக்குறளில் சமயம் இல்லை. வாழ்க்கைக்குப் புனிதம் கற்பிப்பது சமயம். வாழ்க்கைக்குப் பொருள் கற்பிப்பதே அறிவு. திருக்குறள் ஒரு சமய நூல் அன்று. அது முழுக்க முழுக்க ஒரு மாந்த வாழ்க்கைக்கு உரிய நூல். அதில் கூறப் பெற்றுள்ள கோட்பாடுகள், குறிக்கோள்கள், கொள்கைகள், நெறிமுறைகள் அனைத்தும் மாந்த வாழ்வியலுக்குரிய உண்மைகளே! மாந்த வாழ்வியலுக்கு அப்பால் நிகழ்வனவாகக் கற்பனையால் கூறப் பெறும் சில நிலைகள் திருக்குறளுள் கூறப் பெற்றிருந்தாலும், அவை, இவ்வுலகில் மாந்தன் உயிர் வாழ்க்கைக் காலத்தில் சிறந்து விளங்க வேண்டிய ஒரு தேவைக்காகவே கூறப் பெற்றனவாகவே கருதுதல் வேண்டும். உண்மையும் அதுதான். மற்றபடி திருக்குறள் காலத்திய-கற்பனைக் கொள்கைகளைப் பறை சாற்றும் பிற நூல்களில் உள்ளனபோல், திருக்குறளில் வேற்றுலகச் செய்திகளாக எதுவும் கூறவோ, வலியுறுத்தப்படவோ இல்லை என்பதை உணர்தல் வேண்டும். அதில் மெய்யறிவுக் கருத்துகளாக வலியுறுத்திக் கூறப்பெறும் கோட்பாடுகள் கூட, இவ்வுலக மாந்த வாழ்வியலின் மலர்ச்சிக்காகவே கூறப் பெற்றனவாகும். இதை மேலும் விளக்கினால் மிக நீளமாகலின், இக்கருத்தை இத்துடன் நிறுத்திக் கொண்டு, இதன் அடிப்படையில் நாம் கூற வந்ததைப் பற்றிச் சிறிது கருதுவோம். திருக்குறளில் வாழ்வியல் கருத்துகள், மன நலப் பண்புகள், அறிவியல் கூறுகள் முதலியன கூறப் பெற்றிருப்பதெல்லாம், உலக மக்கட் குலத்திற்கே பொருந்துவன என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை தமிழினத்துக்காகவும் அவை சொல்லப் பெற்றன என்பதும். இனி இதனின்று இன்னும் ஒருபடி மேலே சென்று சொல் வதானால், அவை தமிழினத்துக்காகவே மட்டும் சொல்லப் பெற்றன என்பதும் அதற்கு மேலான உண்மையாகும். இனி, இதனை இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், தமிழன் என்றும் தனக்காகச் சிந்தித்த வாழ்வியல், அறிவியல் கோட்பாடுகள், அறங்கள்,