பக்கம்:தமிழின எழுச்சி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

84 • தமிழின எழுச்சி

மிக்க ஒருவன் தன் சுற்றத்தின் நலன்களைக் கருத்தில் கொள்வானானால், பொதுவுணர்வு மிக்க இவனோ தன்னின மக்களையும், பிறவினை மாந்தரையுமே தன் சுற்றமாகக் கருதுகின்றான். எனவே இவன் அவர்களின் அனைத்து நலன்களையுமே தன் வாழ்வு நோக்கமாகக் கொள்கின்றான். தனிநிலை மாந்தன் தானும் தன் உறவினரும் போகவும் வரவும் ஓர் இயங்கி தேவைப்படுவதாக உணர்வான் என்றால், பொது வுணர்வு மாந்தன், தன் இன மக்களையும் உலக மக்களையும் அவர் வாழும் இடங்களையும் அண்டவும் அணுகவும், தன் போக்குவரத்துக் கருவியாக ஓர் இயங்கி தேவையென்பதாக உணரலாம். எனவே இவனின் பொருள்நோக்கம் அவனின் பொருள் நோக்கத்தினின்று விரிவுள்ளதாகவும் அறிவின் வழிப்பட்டு அமைந்ததாகவும் காணப் பெறுகின்றது. தன்னலவுணர்வு உள்ளவன் தன் பொருட்டுத் தான் வாழ எண்ணுவான் எனில், பொதுவுணர்வுள்ளவன் பிறர் பொருட்டுத் தான் வாழ என்ணுகிறான். தன்னலவுணர்வுள்ளவன் பொருள் நசை அனைத்திலும் தான் முதல் என்னும் எண்ணமே தலைதூக்கி நிற்கும். பொதுநல வுணர்வுள்ளவன் பொருள் நாட்டத்திலோ பிறர் முதல் என்னும் எண்ணமே தலையெடுத்து நிற்கும். இவ்விருவர் நோக்கங்களும் பொதுவாகப் பார்ப்பவர் கண்களுக்கு ஏறத்தாழ ஒன்றுபோலவே தோன்றுமாகையால்தான், தன்னலவுணர்வுள்ளவன் பொது நல வுணர்வுள்ளவனைப்போல் பேசிக் கொள்ளவும் ஏமாற்றவும் முடிகின்றது. அதேபோல் பொதுநல வுணர்வுள்ளவனையும் தன்னலவுணர்வுள்ளவனே என்று ஐயுறவும், பழி கூறவும் நேர்கின்றது. ஆனால் இயற்கை இந்நிலைகளையே ஒரு தேர்வுமுறையாக வைத்துப் பின்பற்றத் தக்க ஒருவனின் தகுதி நிலைகளைப் பிறர் கண்டுகொள்ள வாய்ப்பளிக்கின்றது.

தன்னலவுணர்வுள்ளவன் பொதுநிலையாளன்போல் தன் பொருள் நசைக்கும் கரணியங் காட்டுவானாயினும், பொதுநிலையாளன்பால் கூறப்படும் ஐயுறவுக்கும், பழியுரைகளுக்கும், அவற்றால் வரும் கை நெகிழ்வுகளுக்கும் துன்பங்களுக்கும் ஈடுகொடுக்க வியலாதவனாக இருப்பான். ஏனெனில் அவன் நோக்கம் முற்றும் தானும் தன் சுற்றமும் நலமாக வாழ்வதன் பொருட்டாகவே அமைந்து கிடக்கும். ஆகலின் பொது நிலையாளனுக்கு வரும் துன்ப நிலைகளில் சிறு அளவினையும் தாங்கவியலாது, தன் போலி ஈடுபாடுகளினின்றும் விரைந்து தன்னை விடுவித்துக் கொள்கின்றான். அவ்வாறு விடுவித்துக் கொள்கையில், தான் இதுவரையிலும் பொதுநிலையாளன்போல் பிறர் மதிக்க நடந்து கொண்ட நிலைகளில், பிறர் ஐயுறவு கொள்ளாதவாறும் பழி காணாத வாறும், ஏதோ சில பொய்யுரைகளையும், புரை நிகழ்ச்சிகளையும் தன் விடுபாட்டுக்குக் கரணியங்களாகக் காட்டிப், பொதுநிலைக் காலத்துத் தன்னைச்சார்ந்து நின்றார் பால் தொடர்ந்து ஈடுபாடு வேண்டி, மிகத்