பக்கம்:தமிழின எழுச்சி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 85

தந்திரமாகவும் கரவாகவும் நடந்து கொண்டு, மறைமுகமாகத் தன் தனி நலத்திற்காகவும் தன் சுற்றத்தின் நலத்திற்காகவும் உழைக்கின்றான். அவனின் முன்னைய இடைக்கால நடத்தைகள் சிலவற்றால் உவப்புற்ற ஒரு சிலரைத் தன் உழைப்புக்கு உரமாக்கியும் கொள்கின்றான். இந் நிலைகளில் தன்னலவுணர்வுள்ளவனையும், பொதுநல வுணர்வுள்ள வனையும் ஓரளவு இனங்கண்டு கொள்ளும் மக்கள், பொதுவுணர் வாளன்போல் நடிக்கின்ற தன்னல வுணர்வாளனைக் கண்டு கொள்வதில் தான் மிகவும் குழப்பமும் மயக்கமும் கொள்ள வேண்டியவர்களாக ஆகின்றார்கள். இனி, இந்தக் குழப்ப நிலையினையும் மயக்கவுரைகளை யும்கூட தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொள்ள தன்னலவுணர் வாளன் தயங்குவதில்லை. இந்த நிலைகளினின்று மக்கள் தங்களைத் தேற்றிக் கொள்வது மிகவும் கடினம். எனவேதான் பொதுநல வியக்கங்களில் காணப்பெறும் பற்பல சிதைவுகள் எளிதாகவே வேறு சில கிளை இயக்கங்களாக உருப்பெற்று வருகின்றன.

ஓரியக்கத்திற்குப் பொருள் வருவாய் மிக்குளதாயின், பொருள் நசை கொண்ட அவ்வியக்கச் சார்பினன் ஒருவன், அத்தகு வருவாயை விரும்பி, அதுபோல் ஓரியக்கத்தை உருவாக்கினால் என்ன என்று தொடக்கத்தில் எண்ணுகின்றான். எனவே தானும் அவ்வியக்கத்தின் பொதுநோக்கங்களுக்குப் பொருந்தியவன் என்று பலரிடமும் பேசுகின்றான். அப் பேச்சுகளால் எவரெவர் தனக்குச் சார்பானவர்கள் என்பதை யும் தெரிந்து கொள்கின்றான். அவர்களை நெருக்கமாக்கிக் கொண்டு, இயக்கத்தின் பொருள் நிலைகளில் ஐயுறவு ஏற்படுத்துகின்றான். வரு கின்ற வரவு தவறாகப் பயன்படுத்தப் பெறுகின்றது என்றோ , வரவேண்டிய பொருள்களுக்கு மிகுவாகக் கட்டுப்பாடுகள் செய்யப் பெருகின்றன என்றோ, தனக்குச் சார்பானவர்களிடம் இட்டுக்கட்டி யுரைக்கின்றான். அதைக்கேட்டு அங்காக்கும் பொருள் நசையுள்ளவர் களிடம் அதுபோல் தாமும் ஓரியக்கம் தொடங்குவது பற்றி விரிவாக ஆய்ந்து, முடிவில் தாய் இயக்கத்தை இரண்டாக உடைக்கின்றான்.

இவ்வகையில் பொதுமக்கள் ஓருண்மையைக் கண்டு தெளிந்து தேர்தல் வேண்டும். பொதுவுணர்வு சான்றவர்களாக நாம் கருதத் தக்கவர்கள், தாம் பெறுகின்ற பொருள் நிலைகளை எவ்வாறு செலவிடுகின்றனர் என்பதைக் கூர்ந்து நோக்குதல் வேண்டும். அவை தனி நிலைப்பட்ட ஒருவனின், அல்லது ஒரு குடும்பத்தின் நலத்திற்காகச் செலவிடப் பெறுகின்றனவா, அன்றிப் பொதுநோக்கோடு செலவிடப் பெறுகின்றனவா என்பதை நன்கு ஆராய்ந்து அறிதல்வேண்டும். தன் தனி வாழ்வியல் ஊட்டங்களை மட்டும் கருத்தில் கொண்டு பொதுநலம் பேசும் ஒருவன், எதிர்கால நிலையில், எவ்வகையிலும் தன்னை