பக்கம்:தமிழின எழுச்சி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 91

பிறர்க்கும் தம் காழ்ப்புணர்ச்சியை மடல்களாக வடித்துக்கொண்டே இருந்தார். இப்பொழுதும் அவர் வேலை நின்றபாடில்லை.

சேலத்தில், பாவாணர், கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபொழுது, அவரது அறிவாற்றலைக் கண்டு காழ்ப்புற்ற தமிழ் விரிவுரையாளர் ஒருவர், பாவாணரை நேரே பார்த்தறியாத - ஆனால் அவர் அறிவுத்திறனை மட்டும் அறிந்த - வெளியூர்த் தமிழன்பர் பலரிடமும் போய்த் தாம்தாம் பாவாணர் என்றும், தாமே சொல்லாராய்ச்சி செய்வதாகவும் கூறி, ஆங்காங்குப் போலி மதிப்பும் பொருள் கொடைகளும் பெற்றதுண்டு. அவர்கள் ஐயுற்றுக் கேட்குங்கால் தாமே தப்புந் தவறுமாக ஓரிரண்டு சொல்லாராய்ச்சிகளையும் அவர் செய்து காட்டுவாராம். கையை ஆங்கில எழுத்து 'எல்' (L) போல் வைத்து காட்டி, அதனால்தான் முழங்கைக்கு, 'எல்போ ' (Elbow) என்று வந்ததென்று கூறுவது அவர் மொழியாராய்ச்சிக் கூறுகளில் ஒன்று. இவ்வாறு ஒரு துறைக்கோ, அத்துறையைச் சார்ந்த ஒருவர்க்கோ ஒருவகைச் சிறப்பு ஏற்பட்டுப் புகழ்வந்ததென்றால், உடனே அத்துறையிலேயே பலரும் ஈடுபடுவதும், அச் 'சிறப்பைப் 'பொது’வாக ஆக்குவதும், இன்னும் முயன்று தாமே அதன் பெருமைக்கும் புகழுக்கும் உரியவர் - தகுதி மிக்கவர் - என்று பலரிடமும் பேசித் திரிவதும், தமக்கு ஏதோ ஒருவகையில் கடன்பட்ட ஓரிருவரைக் கொண்டு அவ்வாறு பேசச் செய்வதும் - அவை சார்ந்த பிற அனைத்துச் செயல்களும் புகழ்க் காழ்ப்பால் நிகழும் போலிச் செயல்களே!

இக்கால், இலக்கியத் திறனாய்வாளர்போல் தம்மைக் கருதிக் கொண்டு வெற்றாரவாரக்காரர் சிலர், சில வீண் அலப்பல்களைச் செய்து வருகின்றனர். அவர்களுக்கு இலக்கியத் திறனுமில்லை ; நடுநிலையுமில்லை; பரந்த உள்ளமும் இல்லை; சிறந்த மெய்யறிவும் இல்லை. பாவாணர் சிறந்த ஓர் இலக்கிய ஆராய்ச்சியாளர்க்கு ஆறு இயற்கைப் பண்புகள் வேண்டும் என்பார். கூர்த்தமதி, பரந்த இலக்கிய இலக்கணப் புலமை, நடுவு நிலைமை, உள்ள உரம், தன்னலமின்மை , மெய்யறிய அவா ஆகியவை கட்டாயம் தேவை. இக்கால் புகழ்க் காழ்ப்பால் புறப்பட்டிருக்கும் போலித் திறனாய்வாளர்களுக்கோ, இவற்றிற்கு நேர்மாறான தன்மைகளும், பொறாமையும், வெறுப்பும், தன்னலமுமே சிறந்து விளங்குகின்றன.

தமிழ்நாட்டில் இப்பொழுது புகழ்க் காழ்ப்பும், புகழ் வெறியும் அளவுக்குமேல் தலைவிரித்தாடுகின்றன. என்றுமே விளம்பரம் புகழாகாது: இனி, புகழ் என்னும் பொன்றா இசை, ஒருவரின் இறப்புக்குப் பின்னேயே தோன்றுகின்ற காலத்தின் இனிய நினைவாகும். அஃது ஒருவரின் வாழ்வுக் காலத்தில் மலர்வதே இல்லை. அவ்வாறு மலர்வது-