பக்கம்:தமிழின எழுச்சி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 93

களுக்கு ஒரு தலைவலியாகவே உருவெடுத்து வருகின்றது. இத்தலைவலி சில தன்முனைப்பாளர்களால் பூத உருக்கொண்டு வளர்ந்து வருவதை நல்லறிவாளர்கள் கண்டு வருந்தாமல் இருக்க முடியாது. குறிப்பாக, பாவேந்தர் பாரதிதாசனுக்குப்பின் இலக்கியத் துறையில் சிறந்து விளங்குபவர் யார் என்னும் புகழ்ப்போட்டி, இத்தகைய உணர்வுகளில் ஒன்றாகும். பாவேந்தருக்குப் பின் யார் என்னும் நிலையை இத்துறையில் ஈடுபட்ட பலரும் உருவாக்கிப் பலவாறான கருத்துகளையும் வாய் துணிந்து கூறிவருகின்றனர். இவ்வகையில் பலரும் இணைந்து பல குழுக்களாகவே செயல்பட்டு வருகின்றனர். இச்செயல், மிகவும் கவர்ச்சியான ஒருவர் பெயரைச் சொல்லி, அப்பெயருக்குப் பின்னால் தம் பெயரை விளம்பரப்படுத்திக் கொள்ளும் கரவான-இழிவான - ஒரு செயலாகும். கடமையில் கண்ணூன்றாதவர்களும், அழுத்தமான புலமையில் லாதவர்களுமே இதுபோன்ற செயல்களால் தங்களை மூடி மறைத்துக் கொண்டுள்ளனர். பொதுவாகப் பாவேந்தரின் பாணியைப் பின்பற்றி எழுதும் பாவலர்கள் பலருள், ஒவ்வொருவரும் தங்களையே, அல்லது தங்களுக்கு வேண்டியவரையே முதலணியினராகக் கொண்டு விளம்பரப்படுத்திக்கொண்டு வரும் இந்நிலை, இலக்கியத் துறையைப் பொறுத்தமட்டில், மிகவும் இழிந்ததாகும்; அருவருக்கத் தக்கதாகும்; நடுவு நிலையற்ற தன்மையை வளர்த்து விடுவதாகும்; ஆராய்ச்சி யறிவைக் கொன்று புதைப்பதாகும்; பாவலர் பலர்க்குள்ளும் உட்பகையை விளைவிப்பதாகும்; விரும்பத்தகாத பல இழிநிலைகளை உருவாக்குவதாகும். இந்நிலைக்கு வித்திட்டவர்களுள் முதன்மையானவர் மு.வ. அவர் தாம் எழுதிய இலக்கிய வரலாற்றிலேயே இத்தகைய சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளார். பிற்கால இலக்கிய ஆசிரியர்களாக அவர் குறிப்பிடுகின்ற பகுதிகள் பெரும்பாலும் தந்நலப் பிதற்றல்களாகும். இவ்வகையில் இளந்தலைமுறை அறிஞர்கள் தங்கள்மேல் அளவுக்கு மீறி நம்பிக்கை கொண்டு இயங்குவது, முதுபேரறிஞர்களின் பட்டறிவைப் புறக்கணிப்பதாகும். இம்முறை வளர்ச்சியடையப்போகும் அறிவுக் குமுகாயத்தைச் சிதறடிக்கும். எனவே அறிஞர்களும் வரலாற்றாசிரியர்களும் இப்போலி நிலைகளைப்பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டுவது மிகவும் இன்றியமையாததாகும்.

பெரும்பாலும், அறிஞர்கள் ஒவ்வொருவரும் சில தனித்தன்மை உடையவர்களாகவே - சில தனி அறிவுக் கூறுகள் வாய்ந்தவர்களாகவே - இருப்பர். அவர்களின் அறிவுக் கூறுகள் ஒவ்வொன்றும் மக்களினத்தின் தனித்தனியான குறைபாடுகள் சிலவற்றை நிறைவு செய்வனவாகவே இருக்கும். இப்படிப்பட்டவர்களை, மேலோட்டமாக மட்டும் கணித்து, ஒருவரை ஈடானவராகவோ பிறங்கடையினராகவோ கருதிப் பேசுகின்ற - ஆராய்கின்ற - செயல்கள் அறிவுடைமையாகா. அப் பேச்சுகள்