பக்கம்:தமிழின எழுச்சி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

96 • தமிழின எழுச்சி

மும் உண்டு. அத்தகைய உரிமையுணர்வுப் பாவலர் ஒருவரின் சிலையை ஒரு நாலாந்தரப் பாவலனின் சிலைபோல் கருதி நடந்து கொள்ள நினைப்பது, நமக்குப் பெருத்த இழிவும், நம் அடிமை மனப்பாங்கிற்கு உறுதியும் சேர்ப்பதாகும். இவ்வகையில் புதுவை ஆளுநர் மக்கள் உணர்வையே பெரிதாக மதிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். மதிப்பார் என்றும் நம்புகிறோம். அவர் அவ்வாறு மதித்து அவர் சிலைக்கு எவ்வகையான இடமாற்றமும் அதன் வழி இழிவும் நேரா வண்ணம் தம் ஆட்சித் திறத்தைக் கட்டிக் காத்துக் கெள்வார் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

தமிழர்களுக்குப் பாவேந்தர் பாரதிதாசனை விட நேரு அவ்வளவு பெரியவருமல்லர். பெருமை உண்டாக்கியவரும் அல்லர். அவர் இந்த நாட்டின் தலமையமைச்சராகவோ, விடுதலை முயற்சிகளில் பங்கு கொண்டவராகவோ இருக்கலாம். ஆனால் அந்த நிலைகள், தமிழகத்தைப் பொறுத்தமட்டில் தமிழர்களின் அடிமைத் தனத்தையும் வடநாட்டினரின் மேலாளுமையையும் உறுதி செய்வதற்கும் உதவிய செயல்களாகவே கருதப்படும். அதேபோல்தான் காந்தியும் தமிழர்களின் அடிமைத்தனத்திற்கும், தமிழகத்தின் உரிமை யெதிர்ப்புக்கும் வலிவூட்டுபவரேயாவர். எனவே, தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு என்ற அளவில் பாவேந்தர் பாரதிதாசன் மதிப்பிடற்கரிய, பெருமைமிக்க ஒரு விடுதலைப் பாவலர் ஆவார். அவர் பெயருக்கு இழிவு நேரும் எந்தச் செயலையும் தமிழர்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். எனவே, பாவேந்தர் சிலையை இப்பொழுதுள்ள இடத்திலிருந்து அகற்றவோ, வேறு ஓர் இடத்தில் கொண்டு போய் வைக்கவோ, இப்பொழுதுள்ள குடியரசுத் தலைவர் வழிநிற்கும் ஆளுநர் ஆட்சி இசைவளிக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்கின்றோம். அவ்வாறு அந்தச் சிலை ஆளுநரின் அதிகாரச் செருக்கால் அவ்விடத்தினின்று அகற்றப்பட்டு அவமானப் படுத்தப்படுமானால், புதுவை மாநிலத்தில் உள்ள அத்தனைக் காந்தி சிலைகளும், நேரு சிலைகளும் அவ்வவ் விடங்களிலிருந்து அகற்றப்படுவதுடன், அடித்து நொறுக்கித் தூள் தூளாக்கப்படும் என்றும் எச்சரிக்கின்றோம்!

தென்மொழி சுவடி-12, ஓலை-7 சூலை 1975