பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௭. பாடகர்

நாயும் வயிற் றைவளர்க்கும்;
    வாய்ச்சோற்றைப் பெரிதென்று
         நாட லாமோ?
போய் உங்கள் செந்தமிழின்
    பெருமையினைப் புதைப்பீரோ
         பாட கர்காள்!
தோயுந்தேன் நிகர்தமிழாற்
    பாடாமே தெலுங்கிசையைச்
         சொல்லிப் பிச்சை
ஈயுங்கள் என்பீரோ?
    மனிதரைப்போல் இருக்கின்றீர்
        என்ன வாழ்வு! 81

செந்தமிழில் இசைப்பாடல்
    இல்லையெனச் செப்புகின்றீர்
        மான மின்றிப்
பைந்தமிழில் இசையின்றேல்
    பாழுங்கிணற்றில் வீழ்ந்துயிரை
        மாய்த்த லன்றி
எந்தமிழில் இசையில்லை,
    எந்தாய்க்கே உடையில்லை
        என்ப துண்டோ ?
உந்தமிழை அறிவீரோ
    தமிழறிவும் உள்ளதுவோ
        உங்கட் கெல்லாம்? 82

வெளியினிலே சொல்வதெனில்
    உம்நிலைமை வெட்கக்கே-
        டன்றோ? நீவிர்
கிளிபோலச் சொல்வதன்றித்
    தமிழ்நூற்கள் ஆராய்ந்து
        கிழித்திட்டீரோ?
புளி என்றால் புலியென்றே
    உச்சரிக்கும் புலியீரே
        புளுகவேண்டாம்
துளியறிவும் தமிழ்மொழியில்
    உள்ளதுவோ பாடகர்க்குச்
        சொல்வீர் மெய்யாய்! 83

3